search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.
    X
    திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    மாவட்டம் முழுவதும் கனமழை- வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் 12 மலை கிராமங்கள் துண்டிப்பு

    பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டதாலும், நாள் முழுவதும் விடாமல் மழை பெய்ததாலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவே பரவலாக அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முழுவதும் மழை பெய்தது.

    நேற்று முன்தினம் இரவு பெய்யத்தொடங்கிய மழை நேற்று இரவு வரை நீடித்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் என மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் பகல் நேரத்தில் மழை வெளுத்துவாங்கியது.

    தொடர்ந்து மழை பெய்தபடியே இருந்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    நகர பகுதிகள் மட்டுமின்றி மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. அங்கு தொடர்ந்து கனமழை கொட்டியதால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. மாவட்டத்தின் பிரதான அணைகளான பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு அதிகளவில் தண்ணீர் வந்தபடி இருந்தது.

    அந்த அணைகளின் நீர்மட்ட நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபடியே இருந்தனர். பேச்சிப்பாறை அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி வரையிலும், பெருஞ்சாணி அணைக்கு 4ஆயிரம் கனஅடி வரையிலும் தண்ணீர் வந்தது.

    இதனால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 1½ அடி உயர்ந்தது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,508 கனஅடி தண்ணீர் வந்தபடி இருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 73.86 அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

    பேச்சிப்பாறை அணைக்கு 3,783 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 3,710 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 48 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 44.44 அடியாக உள்ளது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டதாலும், நாள் முழுவதும் விடாமல் மழை பெய்ததாலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    மழை காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மேலும் அதிகரித்தது. அருவியில் மிகவும் ஆக்ரோ‌ஷமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    கனமழை காரணமாக கோதையாறு நீர்மின் நிலைய அணைக்கு வந்த தண்ணீர் முழுவதுமாக மறுகாலில் விடப்பட்டதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோதையாறு அருகே உள்ள குற்றியாறு பகுதியில் இருந்து மோதிரமலைக்கு செல்லும் சாலையில் இருக்கும் குற்றியாறு தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

    இதனால் மோதிரமலை-குற்றியாறு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தரைப்பாலத்தை மூழ்கடித்து பல அடி உயரத்திற்கு வெள்ளம் செல்வதாலும், தரைப்பாலத்தின் ஒருபகுதி உடைந்ததாலும் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக 12 மலையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிற்றாறு 1-ல் 78.2 மில்லிமீட்டரும், சிற்றாறு 2-ல் 73 மில்லிமீட்டரும், பெருஞ்சாணியில் 70.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    புத்தன்அணை-69.8
    சுருளோடு-58.4
    பாலமோர்-57.4
    நாகர்கோவில்-34.2
    முள்ளங்கினாவிளை- 32.8
    மயிலாடி-25.2
    கொட்டாரம்-18.4
    குளச்சல்-18.2

    நேற்று பெய்த மழைக்கு மாவட்டத்தில் 6 வீடுகள் இடிந்துள்ளன. விளவங்கோடு தாலுகா பகுதியில் 3 வீடுகளும், கிள்ளியூரில் 2 வீடுகளும், தோவாளையில் ஒரு வீடும் இடிந்திருக்கிறது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    குமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் மழை அதிகளவில் பெய்யவில்லை. இன்று ஒருசில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது. கனமழை எங்கும் கொட்டவில்லை. மலைப்பகுதிகளிலும் மழை அதிகம் இல்லை. இதனால் அணைகளுக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் சற்று குறைந்திருக்கிறது.

    நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் இன்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் இல்லாமல் தட்ப வெப்பநிலை குளுமையாக இருந்து வருகிறது.



    Next Story
    ×