search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

    முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து அணைப் பகுதியில் டி.எஸ்.பி. தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். அணையின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி மூவர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் அறிக்கையை மூவர் குழுவிடம் அளித்தனர். அணையின் நீர் மட்டம் உயரும் போதும், பருவமழை காலங்களிலும் ஐவர் குழு மற்றும் மூவர் குழு பெரியாறு அணையை பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே அணையை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக திருவனந்தபுரம் போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு செல்போன் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அழைப்பு திருச்சூரில் இருந்து வந்தது எனவும், அது புரளி என்றும் தெரியவந்தது. மேலும் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

    இதனிடையே பெரியாறு அணை பகுதியில் டி.எஸ்.பி. நந்தன்பிள்ளை தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×