search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவையில் 2,500-க்கு கீழ் சென்ற கொரோனா தொற்று

    கோவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை, மருத்துவ முகாம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    கோவை:

    கோவையில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்று சிறிது, சிறிதாக உயர தொடங்கி, கடந்த மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் தினசரி பாதிப்பிலும் கோவை, சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு சென்றது. தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேலாக தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்திலேயே கோவை இருந்து வருகிறது.

    தொற்று பரவலை தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை, மருத்துவ முகாம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த மாதம் 4 ஆயிரத்தை தாண்டி சென்ற பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 2,500-க்கும் கீழாக வந்துள்ளது.

    மாவட்டத்தில் நேற்று புதிதாக 2,439 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 710 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்கள் 26 ஆயிரத்து 751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததை அடுத்து 1,576 ஆக அதிகரித்துள்ளது.

    தினசரி பாதிப்பு 2 ஆயிரத்து 500-க்கும் கீழ் வந்துள்ளதுடன், தொற்று பரவலும் 22 சதவீதமாக குறைந்துள்ளது.

    கோவையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு, நோயாளிகள் அனுமதி, உயிரிழப்பு அனைத்தும் குறைந்து வருகிறது. கடந்த மாதம் 50 சதவீதத்திற்கு மேல் இருந்த கொரோனா தொற்று பரவல் தற்போது 20 முதல் 22 சதவீதமாக குறைந்துள்ளது.

    இது 2-வது அலையின் இறங்கு முகமாகும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தனர்.

    Next Story
    ×