search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சிகிச்சை
    X
    கொரோனா சிகிச்சை

    கூடுதல் கட்டணம் வசூல்- கோவையில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை

    பொதுமக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையால் அரசு, இஎஸ்ஐ மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. படுக்கைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

    இவர்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

    இந்த புகார்களை அடுத்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இனி புதியதாக கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல புகார் எழுந்த மேலும் ஒரு தனியார் ஆஸ்பத்திரி மீது விசாரணை நடத்தப்பட்டு அதற்கான நடவடிக்கை இன்று எடுக்கப்பட உள்ளது.

    குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உக்கடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் உறவினர்கள் கொரோனா சிகிச்சைக்காக ரூ.16 லட்சம் செலுத்திய நிலையில், மீதமுள்ள ரூ.4 லட்சம் கொடுத்தால் தான் உடல் ஒப்படைக்கப்படும் என தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையீட்டு உடலை மீட்டு அளித்தனர். இந்நிலையில், இந்த மருத்துவமனையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் நாகராஜன் கூறியதாவது:

    கோவையில் 4 தனியார் மருத்துவமனைகள் மீது புகார் வந்துள்ளது. இதில், ஒரு மருத்துவமனையில் புதியதாக நோயாளிகளுக்கு அட்மி‌ஷன் போடக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.‌ அந்த மருத்துவமனையில், தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணமடையும் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்கள் முழுமையாக குணமடைந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். அவசரப்பட்டு டிஸ்சார்ஜ் செய்ய கூடாது. முழு சிகிச்சை அளிக்க வேண்டும்.

    மறு உத்தரவு வரும் வரை புதிய நோயாளிகள் அட்மி‌ஷன் செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மருத்துவமனை மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார் வந்துள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், உடலை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்த மருத்துவமனையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×