search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம்
    X
    திருமணம்

    மணமகனுக்கும் தொற்று- திருமண வீட்டால் 45 பேருக்கு பரவிய கொரோனா

    கேசவநேரி கிராமத்தை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து ஊருக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு 50 பேர் தான் அனுமதி என்பதால், காலையில் இருந்து மாலை வரை ஐம்பது, ஐம்பது பேராக ஏராளமானோர் வந்து சென்றனர்.

    அதன்பிறகு சில நாட்களில் அந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் மணமகன் உள்பட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் சிகிச்சை பெற்று வந்த கேசவநேரி கிராமத்தில் மட்டும் 4 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    கேசவநேரி கிராமத்தை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து ஊருக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் மருந்து தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இந்த கிராமத்தையொட்டி மேலும் 2 கிராமங்களில் 5 பேர் தொற்று பாதிப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலியான 5 பேரும் திருமண வீட்டிற்கு சென்று வந்த நிலையில் தான் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த கிராமங்களிலும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×