search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விசுவரூபம் எடுக்கும் கொரோனா 2-வது அலை- மதுரையில் பலி எண்ணிகை 500 ஆக உயர்வு

    மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை தனது விசுவரூபத்தை காட்ட தொடங்கியுள்ளது.

    மதுரை:

    இந்தியாவில் கொரோனா 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதனால் மருத்துவ மனைகள் நிரம்பி வரு கின்றன. உயிர் காக்கும் மருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது. அக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகினறன.

    தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை தனது விசுவரூபத்தை காட்ட தொடங்கியுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 524 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    மதுரையில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பலி 496 ஆக இருந்தது. நேற்று 4 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

    வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 170 பேர் நோய்த்தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

    இன்றைய நிலவரப்படி 3,929 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 28,460 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 24,031 பேருக்கு நோய் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இருந்தபோதிலும் 500 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை கழுவ வேண்டும் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்ப முறைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

    இருப்பினும் மதுரை நகர் பகுதிகளில் பல இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக திரள்வதை காண முடிகிறது. பொதுமக்கள் சுய ஒழுக்கத்தை பின்பற்றி அரசு விதிகளை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

    Next Story
    ×