search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் கணபதிநகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    திருப்பூர் கணபதிநகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கொரோனா பரவலை தடுக்க வேப்பிலை, மஞ்சள் கலந்த கிருமிநாசினி தெளிப்பு- பொதுமக்கள் அசத்தல்

    திருப்பூர் பூலுவப்பட்டி அருகில் உள்ள கணபதி நகர் பொதுமக்கள் இணைந்து தங்கள் பகுதியில் தாங்களே தூய்மைப்பணிகளிலும், மருந்து தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சியிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், திருப்பூர் பூலுவப்பட்டி அருகில் உள்ள கணபதி நகர் பொதுமக்கள் இணைந்து தங்கள் பகுதியில் தாங்களே தூய்மைப்பணிகளிலும், மருந்து தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் பூலுவப்பட்டி அருகில் உள்ளது கணபதி நகர். இங்குள்ள 2 வீதிகளில் 50க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன. கொரோனா பரவும் சூழ்நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வருகிறது.

    எங்களது வீதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் இணைந்து கிருமி நாசினி, குளோரின், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை வாங்கி நாங்களே தெளித்து எங்களது வீதிகளை தூய்மையாக வைத்துக்கொள்கிறோம். நோய்ப்பரவல் காலத்தில் அரசுக்கு உதவும் விதமாக இந்த கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை வாரம்தோறும் மேற்கொள்வோம் என்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாநகராட்சி 56வது வார்டு கே.வி.ஆர். நகர், அய்யன் நகர், 7வது வீதியில் அப்பகுதியினர் கிருமிநாசினி தயாரித்து வீதி முழுவதும் தெளித்தனர்.

    மாட்டு சாணம், வேப்பிலை, மஞ்சள், உப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கை கிருமி நாசினி பொருட்களை கிலோ கணக்கில் சேர்த்து அரைத்தனர். அத்துடன் டெட்டால் திரவத்தையும் சேர்த்து, பெரிய கொள்கலத்தில் கலந்து, வீதி முழுவதும் தெளித்தனர். இந்த செயல் பல தரப்பினரிடையே பாராட்டை பெற்றுள்ளது.


    Next Story
    ×