search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ் நிலையம்
    X
    மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ் நிலையம்

    மதுரையில் முழு ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கினர்

    மதுரையில் முழு ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கினர். அதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கினை கண்காணிக்க போலீசார், வருவாய் மற்றும் மாநகராட்சியினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் நேற்று காலை முதல் தங்கள் பணியில் ஈடுபட்டனர். பால் விற்பனை, மருந்து கடைகள் மற்றும் பத்திரிகை வினியோகம் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் நேற்று பால் கடைகள் திறந்து இருந்தன. பொதுமக்கள் வழக்கம் காலையில் பால் வாங்குவதற்காக சாலையில் வலம் வந்தனர். ஆனால் இறைச்சி கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில் வீட்டில் இறைச்சி எடுப்பது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் முந்தைய நாள் இறைச்சிகளை வாங்கி வைத்து கொண்டனர். ஆனால் சிலர் சனிக்கிழமை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்ததால் இறைச்சி வாங்குவதை தவிர்த்தனர்.

    முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்காக மதுரையின் முக்கிய சாலைகளில் எல்லாம் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணித்து வந்தனர். குறிப்பாக காளவாசல், கோரிப்பாளையம், காமராஜர் சாலை, மாட்டுத்தாவணி ஆகிய இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி எங்கு செல்கிறீர்கள், எதற்காக செல்கிறீர்கள் என்று விசாரணை செய்த பின்பே அனுமதித்தனர். தேவையில்லாமல் சாலையில் வலம் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    சரக்கு போக்குவரத்து வாகனங்கள், எரிபொருள் நிரப்பும் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்று அரசு அறிவித்து இருந்தது. அதனால் நேற்று சாலைகளில் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல் சென்றன. இந்த வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பரவை காய்கறி மார்க்கெட், மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அனைத்து மூடப்பட்டு இருந்தன.

    மதுரை கலெக்டர் அன்பழகன் கோரிப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார். ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்குவதற்கு குறிப்பிட்ட நேரம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சில ஓட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன.. அங்கு அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட வில்லை. முழு ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்களின் ஒத்துழைப்போடு மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமைதியாக இருந்தது.
    Next Story
    ×