search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும் தினமும் வந்து அங்குள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் மாணவர்கள்
    X
    கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும் தினமும் வந்து அங்குள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் மாணவர்கள்

    ஊரடங்கால் மூடப்பட்டுள்ள நிலையிலும் தினமும் பள்ளிக்கு சென்று மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் அரசு பள்ளி மாணவர்கள்

    பெரம்பலூர் அருகே ஊரடங்கால் மூடப்பட்டுள்ள நிலையிலும் மாணவர்கள் சுய விருப்பத்துடன் பள்ளிக்கு வந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரி வகுப்புகளும் படிப்படியாக தொடங்கப்பட்டன.

    இந்த நிலையில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளதால் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போதைய நிலையில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டுமே வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

    ஆனால் பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குரூப், குரூப்பாக தினமும் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு அங்கு நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக வந்து செல்கிறார்கள். இயற்கையை பாதுகாக்க அந்த மாணவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

    இந்த பள்ளியில் 164 மாணவ-மாணவிகள் மற்றும் 12 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த 2019 நவம்பர் மாதம் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் புகழேந்தி இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார். பின்னர் பள்ளி வாளகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து பசுமை பள்ளியாக மாற்றும் திட்டத்தை அறிவித்தார்.

    இதையடுத்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நடவு செய்தார். மேலும் அந்த மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மரங்களை பாதுகாக்க அமைக்கப்படும் இரும்பு வேலியில் நடவு செய்த மாணவர்களின் பெயர்களையும் எழுதியுள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது தினமும் அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தனர்.

    இந்தநிலையில் திடீரென ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இருந்தபோதிலும் பள்ளிக்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்கள் தினமும் பள்ளிக்கூடம் சென்று மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

    இதுபற்றி பாரதி பிரியா என்ற 10-ம் வகுப்பு மாணவி கூறும்போது, என் வீடு பள்ளிக்கு அருகாமையில் உள்ளது. இதனால் தினமும் ஊரடங்கிலும் நான் நடவு செய்த மரக்கன்றுகளுக்கு தவறாமல் தண்ணீர் ஊற்றி வருகிறேன்.

    என்னுடைய பள்ளிக்காலம் நிறைவடையும்போது ஜூனியர் மாணவர்களிடம் பொறுப்பினை ஒப்படைப்பேன் என்றார்.

    ஆசிரியர் புகழேந்தி கூறும்போது, பள்ளி தலைமை ஆசிரியை சோபாவின் ஒத்துழைப்பால் மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில் மாணவர்களுக்கு இடையே வாட்ஸ்அப் குரூப்பினை உருவாக்கினேன். இப்போது அவர்களுக்குள் முடிவு செய்து குரூப் குரூப்பாக செல்கிறார்கள். தினமும் சமூக இடைவெளியை பின்பற்றி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியை சோபா பேசும்போது, இப்போது பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை. ஆனால் மாணவர்கள் சுய விருப்பத்துடன் பள்ளிக்கு வந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இயற்கையை நேசிக்கிறார்கள் என்றார். 

    Next Story
    ×