search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் சுகாதாரத்துறை சார்பில் பனியன் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
    X
    திருப்பூரில் சுகாதாரத்துறை சார்பில் பனியன் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

    திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 190 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 154 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,155ஆக உயர்ந்துள்ளது. தற்போது 834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 228 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.

    இதுவரை 72ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் பனியன் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நேரில் செல்லும் மருத்துவ குழுவினர், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளனர்.

    மருத்துவ துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து இப்பணியில் ஈடுபடுகிறது. தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்துவதால் தொற்று வெகுவாக குறைய வாய்ப்பு உருவாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பனியன் நிறுவன தொழிலாளர்களின் விவரங்களை சுகாதாரத் துறையினர் சேகரித்து வருகின்றனர். தற்போது பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 190 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர அவிநாசியில் மகாராஜா கல்லூரியில் 200, தாராபுரத்தில் மகாராணி நர்சிங் கல்லூரி மற்றும் உடுமலையில் அரசு கலைகல்லூரியில் தலா 100 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையங்கள் திறக்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், தொற்றுதடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பனியன் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மருத்துவ துறையினர் நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும் போது தொழிலாளர்கள் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
    Next Story
    ×