search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் எடப்பாடி பழனிசாமி 13 இடங்களில் பிரசாரம்

    6-வது கட்டமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 நாள் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார்.

    நெல்லை:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி 6-ம் கட்டமாக அவர் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதற்காக நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி வருகிறார்.

    கடந்த மாதம் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அவர் பிரசாரம் செய்திருந்தார்.

    இந்நிலையில் நாளை திருச்செந்தூர், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்.

    பின்னர் அவர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காலை 11 மணிக்கு பிரசாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து 12 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் பிற்பகலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    அதனை முடித்து கொண்டு மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தொடர்ந்து 18-ந்தேதி (வியாழக்கிழமை) நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    காலை 10 மணிக்கு வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முன்பு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது மக்களிடையே பேசுகிறார்.

    பின்னர் காலை 11.40 மணிக்கு களக்காடு திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து அம்பை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    அன்று மாலை அவர் தென்காசி மாவட்டத்திற்கு செல்கிறார். மாலை 4 மணிக்கு ஆலங்குளம் தொகுதியில் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட் பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    தொடர்ந்து தென்காசி தொகுதிக்குட்பட்ட பாவூர்சத்திரத்தில் மாலை 5.10 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு தென்காசி இசக்கி மஹாலில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடுகிறார்.

    19-ந்தேதி (வெள்ளிக் கிழமை) கடையநல்லூர் பள்ளிவாசல் அருகே நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட புளியங்குடி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடுகிறார்.

    அதனை முடித்துக் கொண்டு சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெறும் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதல்- அமைச்சர் கலந்துரையாடல் நடத்துகிறார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாவட்ட எல்லைகள் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்களில் அவரை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    3 நாட்கள் முதல்- அமைச்சர் பிரசாரம் செய்வதையொட்டி அ.தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×