search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரி டிஜிட்டல் வாக்காளர் அட்டை
    X
    மாதிரி டிஜிட்டல் வாக்காளர் அட்டை

    டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பது எப்போது?

    தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
    மதுரை:

    தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கி உள்ளது. கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,500 பேர் வாக்களிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படுகிறது. அதே போல் வாக்குப்பதிவு நேரமும் 1 மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது.

    தேர்தலுக்கான முக்கிய பணியாக தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர்களை சேர்க்கவும், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுவாக, அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு தான் தபால் ஓட்டு வழங்கப்படும். ஆனால் வரும் தேர்தலில் புதிய முறையாக 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட உள்ளது. அதற்கான விரிவான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி அவர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் தபால் மூலம் ஓட்டு போடலாம்.

    அதேபோல் இந்த தேர்தலில் புதிய முறையாக டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஆதார், பான்கார்டு போன்று வாக்காளர் அட்டையும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது. அந்த அட்டையின் உண்மை தன்மையை அதில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

    அதேபோல் கார்டு தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாேலா மீண்டும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டையை www.nvsp.in என்ற இணைய தளத்தில் கடந்த 25-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    அதாவது கடந்த நவம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ந்த வாக்காளர்கள் 25-ந் தேதியில் இருந்தும், மற்ற அனைத்து வாக்காளர்களும் பிப்ரவரி 1-ந் தேதி முதலும் டிஜிட்டல் அடையாள அட்டையை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் தற்போது புதிதாக சேர்ந்தவர்கள் மட்டுமே டிஜிட்டல் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடிகிறது.

    மற்ற வாக்காளர்கள் 1-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இணையதளத்தில் இருந்து மற்றவர்களால் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே தேர்தல் ஆணையம் விரைந்து செயல்பட்டு அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை இணையதளம் மூலம் எளிதாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    Next Story
    ×