search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- வைகோ

    மொழிகல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்.

    6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்குக்கூட கற்றுத் தரலாம். பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112-ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.

    மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் பள்ளிகளில் தாய் மொழிக்கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பதை கடுமையாகக் கண்டனம் செய்திருந்தேன்.

    இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்பிற்குச் செல்ல முடியும் என்றும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பில் தீவிரமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையும், இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது.

    அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவனையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தையும், சம வாய்ப்பையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். இல்லையேல், இந்திய ஒருமைப்பாடு என்பது வினாக்குறி ஆகும்.

    எனவே தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க உரிய ஆசிரியர்களையும் நியமனம் செய்து, தாய் மொழிக் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் தேட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×