search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி தண்ணீர் வரத்து

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 119 நாட்களாக கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி நீர் வந்து சேர்ந்துள்ளது.
    செங்குன்றம்:

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின்படி, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கண்டலேறு அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யப்படும். கடந்த வாரம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக இருந்தது. தற்போது வினாடிக்கு 800 கனஅடி ஆக தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரை குப்பம் ஜீரோ பாயிண்ட்டுக்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.

    இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 21-ந் தேதி முதல் நேற்று வரை 119 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.96 அடியாக பதிவாகியது.

    3 ஆயிரத்து 135 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதே போல் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    Next Story
    ×