search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை
    X
    பாபநாசம் அணை

    பாபநாசம் அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்

    பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1847 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மீதம் உள்ள உபரிநீர் சேர்வலாறுக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து தாமிபரணி ஆற்றுக்கு விடப்படுகிறது.
    நெல்லை:

    தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து பிரதான அணையான பாபநாசம் அணை, சேர்வலாறு அணை மற்றும் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய அணைகள் நிரம்பியது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.

    பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1847 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 142.45 அடியாக வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள உபரிநீர் சேர்வலாறுக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து தாமிபரணி ஆற்றுக்கு விடப்படுகிறது.

    இன்று காலை தாமிபரணி ஆற்றில் வினாடிக்கு 1863 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் 156 உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் தற்போது 144.68 அடியாகவே உள்ளது. திடீரென்று கனமழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் தாமிபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவு கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று பாபநாசம் படித்துறையை மூழ்கடித்தபடியும், குறுக்குத்துறை மண்டபத்தை சூழ்ந்தும் தண்ணீர் சென்றது. இன்று சற்று குறைவாக தண்ணீர் செல்கிறது. ஆனாலும் ஆற்றில் வேகமாக தண்ணீர் செல்வதால், கரையோர மக்கள் பாதுகாப்பாகவும், ஆற்றில் குளிக்காமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து 3-வது நாளாக தாமிபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இன்று மழை பெய்யவில்லை என்றால் வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குற்றாலம் அருவிகளில் வெள்ளம் காரணமாக கடந்த 18,19-ந் தேதிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள். இன்றும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளித்து வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவு நன்றாக பெய்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

    எந்தபகுதியிலும் வெள்ளம் சூழவில்லை. சில வடிகால் பகுதியில் மட்டும் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
    Next Story
    ×