search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை
    X
    பாபநாசம் அணை

    ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்வு- நிரம்பும் நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் கிடுகிடுவென 5 அடி உயர்ந்தது. நேற்று 129.45 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 134.10 அடியாக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக பாபநாசம், தென்காசியில் தலா 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அம்பை, சிவகிரி, மணிமுத்தாறு பகுதியிலும் ஓரளவு கனமழை பெய்தது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 4299 கன அடி தண்ணீர் வருகிறது. தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் போவதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் கிடுகிடுவென 5 அடி உயர்ந்தது. நேற்று 129.45 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 134.10 அடியாக உயர்ந்துள்ளது.

    இதுபோல சேர்வலாறு அணை நீர்மட்டமும் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. நேற்று 141.60 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 146.09 அடியாக உயர்ந்துள்ளது.

    பாபநாசம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 143 அடியாகும். அணை பாது காப்பு கருதி 142 அடி வரையே தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தற்போது பாபநாசம் அணையில் 134.10 அடி நீர்மட்டம் உள்ளது. இதனால் அணை நிரம்ப இன்னும் 8 அடி தண்ணீர் மட்டுமே தேவை. இன்னும் 2 நாட்கள் கனமழை பெய்தால் அணை முழுவதும் நிரம்பி விடும்.

    இதுபோல சேர்வலாறு அணையின் உச்ச நீர்மட்ட உயரம் 156 அடியாகும். இங்கு 155 அடி வரை தண்ணீர் தேக்கப்படும். தற்போது இங்கு 146.09 அடி தண்ணீர் உள்ளது. எனவே அணை நிரம்ப இன்னும் 9 அடி தண்ணீர் மட்டுமே போதும். இங்கும் 2 நாள் மழையில் அணை முழுவதும் நிரம்பி விட வாய்ப்பு உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1992 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 102.35 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 118 அடியாகும்.

    ஆனால் இந்த அணை அகலமான பெரிய அணையாகும். இந்த அணை நிரம்ப 16 அடி நீர்மட்டம் உயர வேண்டும். கடனா நதி நீர் மட்டம் 83 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப மேலும் 2 அடி நீர்மட்டம் தான் தேவை. கருப்பாநதி நீர்மட்டம் 69.56 அடியாகும்.

    இந்த அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் வேண்டும். ஆனால் ‌ஷட்டர் பழுதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    ராநமதி நீர்மட்டம் இன்று 76 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 8 அடி தண்ணீர் தேவைப்படுகிறது. குண்டாறு அணை தொடர்ந்து 36.10 அடியாக நிரம்பி வழிகிறது. வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    Next Story
    ×