search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரியில் தொடர் மழையால் 380 குளங்கள் நிரம்பின

    குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் 380 குளங்கள் நிரம்பி உள்ளன.
    நாகர்கோவில்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குமரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களிலும் மழை நீர் புகுந்ததால், அதனை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மழையால் செங்கல் தயாரிக்கும் பணி, ரப்பர் பால் வெட்டும் பணிகள் முடங்கி உள்ளன. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    மலையோர மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 2,040 குளங்கள் உள்ளன. இதில் 380 குளங்கள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளன. 266 குளங்கள் 90 சதவீதமும், 318 குளங்கள் 80 சதவீதமும், 365 குளங்கள் 70 சதவீதமும் நிரம்பி உள்ளன.

    391 குளங்கள் 50 சதவீதமும், 252 குளங்கள் 25 சதவீதமும், மீதமுள்ள குளங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது. இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி விடும்.

    குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 43.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பூதப்பாண்டி- 4.2, சிற்றார் 1- 12, கன்னிமார்- 14.8, கொட்டாரம்- 19.2, நாகர்கோவில்- 9.8, பேச்சிப்பாறை- 2.4, புத்தன்அணை- 9.8, பெருஞ்சாணி- 10.4, சிற்றார் 2- 4, சுருளோடு- 4, மாம்பழத்துறையாறு- 5.4, பாலமோர்- 8.4, அடையாமடை- 5, குருந்தன்கோடு- 7.4, முள்ளங்கினாவிளை- 2, முக்கடல் அணை- 4.4, ஆரல்வாய்மொழி- 16 என மழை பதிவாகியது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.90 அடியாக உள்ளது. அணைக்கு 965 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 428 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை 70.05 அடியாகவும், அணைக்கு 675 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து 200 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1- 15.15 அடியாகவும், சிற்றார் 2- 15.25 அடியாகவும், முக்கடல் அணை 22 அடியாகவும் உள்ளது.
    Next Story
    ×