search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தம் புது பட்டாசுகள்
    X
    புத்தம் புது பட்டாசுகள்

    திருப்பூருக்கு விற்பனைக்கு வந்த புத்தம் புது பட்டாசுகள்

    தீபாவளி பண்டிகைக்கு திருப்பூருக்கு புத்தம் புது பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
    திருப்பூர்:

    நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. திருப்பூரிலும் தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள் முதல் அனைத்து பொருட்களையும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இதனால் திருப்பூர் மாநகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறது. தீபாவளி பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது பட்டாசுகள் ஆகும். இந்த பண்டிகையின் போது மாநகர் பகுதிகளில் ஏராளமானவர்கள் உரிய அனுமதி பெற்று பட்டாசுகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் பட்டாசுகள் விற்பனையும் மும்முரமாக நடைபெறும். இதனால் பட்டாசு விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஆண்டுதோறும் புத்தம் புது பட்டாசுகளை அறிமுகம் செய்து விற்பனை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் திருப்பூருக்கு ஏராளமான புத்தம் புது பட்டாசுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

    அதன்படி சோனா கார்டன் என்கிற பட்டாசு 7 நிறங்களில் வெடித்து சிதறும். இந்த ஆண்டு இது விற்பனைக்கு வந்துள்ளது. இதுபோல் கலர் சாங்க் என்கிற பட்டாசு புஷ்வானம் போன்று இருக்கிறது. இந்த திரியில் தீயை வைத்தவுடன் புஷ்வானம் போன்று மேலே செல்லும். மேலும், இதில் இருந்து ஒருவித இசை (மியூசிக்) வருகிறது.

    மேலும், இந்த ஆண்டு மேஜிக் ஷோ என்கிற புதிய பட்டாசு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பட்டாசின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பட்டாசு வெடித்து சிதறும் போது அதில் இருந்து பேப்பர்கள் சிதறாது. இதற்கு மாறாக ரூ.500 மற்றும் ரூ.2000 போன்ற பண நோட்டுகள் சிதறும். குழந்தைகளை கவரும் வகையில் ரிங் கேப் என்கிற துப்பாக்கியும் உள்ளது. இந்த துப்பாக்கியில் புல்லட் போடுவது போல் வெடி மருந்துகளை வைத்து குழந்தைகள் வெடித்து மகிழும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சில்வர் காயின், கோல்டன் காயின் என்ற பட்டாசுகளை வெடித்தால் இதில் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் போன்று அதில் இருந்து ஒளி வரும் வகையிலான பட்டாசுகளும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த புத்தம் புது பட்டாசுகள் விற்பனை தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

    இது குறித்து பட்டாசு விற்பனையாளர் முத்துராஜ் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாகவே பட்டாசுகளை வாங்கியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சத்திற்கு பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்வோம். இதுபோல் ஏராளமான புத்தம் புதிய பட்டாசுகளும் வாங்கி வருவோம்.

    ஆனால் இந்த ஆண்டு தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு கொள்முதலை குறைத்துக்கொண்டோம். இருப்பினும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பட்டாசுகள் வாங்கி செல்கிறார்கள். இன்னும் 2 நாட்கள் தீபாவளி பண்டிகைக்கு இருப்பதால், விற்பனை அதிகமாக நடைபெறும் என எதிர்பார்த்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×