search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பு

    தோவாளை மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் குமரி, நெல்லை, மதுரை, தேனி, தர்மபுரி, சேலம் உள்பட பல மாவட்டத்தில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பூக்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படும். தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்கு வருவதால் வியாபாரிகளும் அதிகாலையிலேயே வந்து பூக்களை வாங்கி செல்வார்கள். விற்பனையும் மும்முரமாக நடைபெறும்.

    தற்போது ஆயுத பூஜைக்கு இன்னும் இரண்டு தினங்களே இருப்பதால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியுள்ளது. வழக்கத்துக்கு மாறாக வெளியிடங்களில் இருந்து அதிக அளவிலான ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட கலர் பூக்கள் வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    கடந்த சில நாள்களாக பூக்களின் வரத்து அதிகரித்துள்ளன. சாதாரணமாக தினமும் 10 டன் பூக்கள் வரும். ஆனால், நேற்று முன்தினம் 25 டன், நேற்று 30 டன் பூக்கள் மார்க்கெட்டில் வந்து குவிந்தன. இங்கு இன்றும் (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளையும் (சனிக்கிழமை) பூக்கள் வரத்து அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் என தெரிகிறது.

    அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சாதாரணமாக ரூ. 150 க்கு விற்பனையான அரளி (கழனி) நேற்று ரூ.280 க்கு விற்பனையானது. அதேபோல பிச்சி மற்றும் மல்லிகை பூக்கள் வழக்கத்தை விட கூடுதல் விலையில் உள்ளது.

    பூக்களின் விலை குறித்து வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

    ஆயுத பூஜையையொட்டி பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் வெளி மாவட்டத்தில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் மார்க்கெட்டுக்கு நேற்று 30 டன் பூக்கள் வந்து இறங்கின. நேற்று முன்தினம் 25 டன் பூக்கள் வந்தது. இந்த நிலையில் நாளையும், நாளை மறுநாளும் ஆயுதபூஜை வியாபாரம் நடைபெற இருப்பதால் 50 டன்னுக்கும் மேலான பூக்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தோவாளை மார்க்கெட்டில் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோவாளை மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை விபரம் கிலோவில் வருமாறு:-

    பிச்சி ரூ.400, மல்லிகை ரூ.600, முல்லை ரூ. 350, சம்பங்கி ரூ.300, கனகாம்பரம் ரூ. 600, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.40, தாமரை (100 எண்ணம்) ரூ. 500, கோழிப்பூ ரூ.60, பச்சை ஒரு கட்டு ரூ. 7 , ரோஜா (100 எண்ணம்) ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.150, ஸ்டெம்பு ரோஸ் (1 கட்டு) ரூ.200, மஞ்சள் கேந்தி ரூ. 55, சிவப்பு கேந்தி ரூ.60, சிவந்தி மஞ்சள் ரூ.120, வெள்ளைச் சிவந்தி ரூ.270, கொழுந்து ரூ.120, மருக்கொழுந்து ரூ.150 என விற்பனை செய்யப்பட்டது.
    Next Story
    ×