search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

    பெரியகுளம் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
    திண்டுக்கல்:

    அ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் யார்? என்ற பரபரப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு வந்தார். சென்னையில் இருந்து காரில் வந்த அவருக்கு தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    வருகிற 6-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் அது உடனடியாக தலைமைக்கழக டுவிட்டர் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி 6-ந் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தள்ளது.

    இது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது, அது குறித்த அறிவிப்பு தனக்கு எதுவும் வரவில்லை என்றும், அ.தி.மு.க.வில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    பெரியகுளத்தில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களை சந்திப்பார் என்று ஏராளமான செய்தியாளர்கள் அவர் வீட்டு முன்பு கூடியிருந்தனர். ஆனால் தனது பேரனுக்கு பிறந்தநாள் என்பதால் அதற்காகவே வீட்டுக்கு வந்ததாகவும், அரசியல் பேச விரும்பவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். அதன் பின்பு ஓ.பி.எஸ். தனது கார் மூலம் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார்.

    அங்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்பட தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட நிர்வாகிகள் அதிக அளவில் இருந்தனர். அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து நிர்வாகிகள் பண்ணை வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் செய்தியாளர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் சென்னை திரும்பியதும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு முடிவை அறிவிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் கட்சியினரிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

    Next Story
    ×