search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தந்தை வாங்கிய கடனை அடைக்க கல்லூரி தோழி வீட்டில் நகை-பணம் திருடி சிக்கிய மாணவர்

    தந்தை வாங்கிய கடனை அடைக்க கல்லூரி தோழி வீட்டில் ரூ.10 லட்சம் நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் கைதான மாணவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தர் ராமலிங்கம், ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடந்ததுடன், பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.

    அதிர்ச்சியடைந்த ராமலிங்கம் நடந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் கல்லூரியில் படிக்கும் ராமலிங்கம் மகளின் நண்பர் குபேந்திரன் என்பவர் ராமலிங்கம் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதால் அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது குபேந்திரன் நகை-பணத்தை திருடியது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது தோழியுடன் ராமலிங்கம் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன்.

    எனது தந்தை வங்கி ஒன்றில் கடன் வாங்கியிருந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் பணத்தை திருப்பி செலுத்துமாறு வங்கியில் இருந்து டார்ச்சர் அதிகமாக இருந்தது.

    இதனிடையே ராமலிங்கம் வீட்டை பூட்டினால் சாவியை எங்கு வைப்பார் என்ற விவரம் எனக்கு தெரியும். இதை மனதில் கொண்டு அவர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வந்தேன் என்று கூறினார். எடுத்த பணம், நகைகளையும் திருப்பிக் கொடுத்தார்.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குபேந்திரனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர் திருச்சி கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. படித்து வருகிறார்.
    Next Story
    ×