search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ராமன்
    X
    கலெக்டர் ராமன்

    சேலத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

    சேலத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், நகைக் கடைகள், உணவு விடுதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அந்தந்த நிறுவனத்தினரே ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்ந்து மேற்கூரையில் இருந்து தரைதளம் வரை முழுமையாக அனைத்து பகுதிகளிலும் நன்கு படும்படி கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

    மேலும் நிறுவனத்தில் உள்ள அறைகள் அனைத்தும் காற்றோட்டமாகவும், நன்கு வெளிச்சம் படும்படியும் அனைத்து கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிப்பதை முறையாக கடைபிடித்திடும் வகையில் இதற்கென தனி பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு பின்பற்றாத கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மீது அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்படும். மேலும் தொழிற்சாலைகள், அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரிபவர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திலும் கைகளை சோப்பு கொண்டு சுத்தமாக கழுவுவதற்கென தனியாக வசதிகள் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சம் அந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×