search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வால் ரம்மியமாக காட்சி அளிக்கும் தேக்கடி ஏரி
    X
    பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வால் ரம்மியமாக காட்சி அளிக்கும் தேக்கடி ஏரி

    பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வால் ரம்மியமாக காட்சி அளிக்கும் தேக்கடி ஏரி

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வால் தேக்கடி ஏரி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
    தேனி:

    தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தேக்கரி ஏரி அமைந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி என்ற போதிலும் தேக்கடி ஏரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இங்கு படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2 வாரங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 825 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியதால் அங்குள்ள 13 மதகுகளுக்கு அருகில் உள்ள மேட்டை மூழ்கடித்து மதகுகளில் முட்டியபடி தண்ணீர் நிற்கிறது. மதகுகள் ஏற்கனவே இயக்கி சோதித்து பார்த்து நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் உயருவது குறித்த விவரங்களை அணையில் இருந்தபடி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேகரித்து தமிழக அரசுக் கும், கேரள அரசுக்கும் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தற்போது தேக்கடி ஏரி கடல்போல் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது. ஏரியில் படகு சவாரிக்கு மக்கள் செல்லும் நடைமேடை வரை தண்ணீர் நிற்கிறது.

    மேலும் படகுகளும் கரையோரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சாரல் மழையும், பகலில் மிதமான வெயிலும் என சூழல் நிலவுவதால் அப்பகுதி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரம்மியமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×