search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்ட கலெக்டர் ராமன்
    X
    சேலம் மாவட்ட கலெக்டர் ராமன்

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1,400 படுக்கை வசதிகள் தயார்- கலெக்டர் ராமன்

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1,400 படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நோய் தடுப்பு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் கால, நேரம் பாராமல் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியும் நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கும், அவர்களை சார்ந்தோர்களை தனிமைப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் 1,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

    இவற்றில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆத்தூர், மேட்டூர் அரசு மருத்துவமனைகள், விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விநாயகா மிஷன் சிறப்பு மருத்துவமனை, அன்னபூர்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, பிரியம் மருத்துவமனை, எஸ்.பி.எம்.எம். மருத்துவமனை, கோகுலம் மருத்துவமனை, தரண் மருத்துவமனை, பெரியார் பல்கலைக்கழகம், காவேரி பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் கொரோனா வைரஸ் நோய் தொற்று சிறப்பு சிகிச்சைகள் அளிப்பதற்கான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    நேற்று வரை சேலம் மாவட்டம், பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த 1,676 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள பிற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களில் 968 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 6 பேர் இந்நோய் தொற்றினால் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளனர். மீதமுள்ள 702 பேர் மேற்குறிப்பிட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவற்றில் லேசான அறிகுறிகளுடன் 677 பேரும், மிதமான அறிகுறிகளுடன் 19 பேரும், கடுமையான பாதிப்புடன் 6 பேரும் என மொத்தம் 702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 55,078 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கின்றதா என்பதற்கான ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று வரை பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த 10,177 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் 9,716 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தும் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 461 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×