என் மலர்

  செய்திகள்

  கொலை
  X
  கொலை

  அடமானம் வைத்த நகையை திருப்பி தராததால் அடகு கடை அதிபர் கடத்தி கொலை- 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் செலவுக்கு அடமானம் வைத்த நகையை திருப்பி தராததால் அடகு கடை அதிபர் கடத்தி கொன்று புதைத்த வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  சேத்துப்பட்டு:

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொட்டிநாயுடு தெருவை சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி (வயது 54). தேசூரில் அடகுகடை நடத்தி வந்தார்.

  கடந்த மாதம் 25-ந் தேதி கடைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நிர்மலா தேசூர் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக சக்கரவர்த்தி பணத்திற்காக கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தததில், அசோக சக்கரவர்த்தி காரில் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

  இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக வந்தவாசி அடுத்த தென்னாத்தூர்மொளப்பட்டு கிராமத்தை சேர்ந்த தெள்ளார் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. பிரமுகர் திருநாவுக்கரசு (37) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவிடம் சரணடைந்தார்.

  தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் திருநாவுக்கரசுவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் அவர் தெள்ளார் கிராமத்தை சேர்ந்த கவியரசு (27), முருகன் (28) ஆகியோருடன் சேர்ந்து நகை அடகுகடைக்காரர் அசோக சக்கரவர்த்தியை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

  கைதான திருநாவுக்கரசு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

  நான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மொளப்பட்டு ஊராட்சியில் போட்டியிட்டேன். தேர்தல் செலவுக்காக எனது நகைகளை அசோக சக்கரவர்த்தியிடம் அடமானம் வைத்து, ரூ.2.50 லட்சம் கடன் வாங்கினேன். 2 மாதத்துக்கு முன்பு பணத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால் அசோக சக்கரவர்த்தி நகைகளை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

  இதனால் மனவேதனை அடைந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி அகரகொரக்கோட்டையில் உள்ள எனது நண்பரின் ஹாலோபிக் கற்கள் உற்பத்தி செய்யும் மையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கவியரசு, முருகன் ஆகியோரின் உதவியை நாடினேன்.

  அவர்களும் அசோக சக்கரவர்த்தியை கடத்தி கொலை செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்படி சம்பவத்தன்று அசோக சக்கரவர்த்தியை காரில் கடத்திய இருவரும், ஹாலோபிக் கற்கள் உற்பத்தி மையத்திற்கு கொண்டு வந்து சரமாரியாக தாக்கி கொலை செய்து அங்கேயே புதைத்து விட்டனர்.

  மேலும் அசோக சக்கரவர்த்தியிடம் இருந்து பறித்த சாவியை கொண்டு அவரது கடையில் இருந்து நகைகளை கொள்ளையடித்து விட்டனர். இந்நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதால் சரணடைந்து விட்டேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  கைதானவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்பேரில் புதைக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் பிரேத பரிசோதனை செய்தனர்.
  Next Story
  ×