search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொற்றவை சிலை
    X
    கொற்றவை சிலை

    ராஜபாளையம் அருகே பாண்டியர் காலத்து சிலை கண்டெடுப்பு

    ராஜபாளையம் முறம்பு அருகே அமைந்துள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மாங்குடிக்கு அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா தனது நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது 6 அடி உயரமுள்ள கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையில் நான்கு கைகளும் உடைந்த நிலையில் காணப்பட்டது.

    தென்தமிழகத்திலேயே முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிலை அழகாக செதுக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் வட இந்தியாவில் கொற்றவைக்கு சிங்கம் மற்றும் புலி போன்றவை வாகனமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கலைமான் கொற்றவையின் வாகனமாக காட்டப்படுவது அரிதாக உள்ளது. வட தமிழகத்தில் எடுக்கப்பட்ட மான் வாகனத்தை கொண்ட கொற்றவை சிலை ஒன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் கொற்றவையின் வாகனமாக கலைமானுடன் உள்ள சிலை முதன் முதலாக தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்தில் கொற்றவை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. பாலை நில மக்களின் பிரதான கடவுளாகவும், போர் தெய்வமாகவும் கொற்றவை வழிபாடு இருந்துள்ளது. தற்போது கொற்றவை வழிபாடு பிடாரி, காளி, துர்க்கை போன்ற கடவுளின் வழிபாட்டோடு சேர்க்கப்பட்டுள்ளது.

    5 அடி உயரமுள்ள கொற்றவை சிலையின் கைகள் உடைந்த நிலையில், அபய முத்திரையுடன் உள்ள ஒரு கை மட்டும் கயிற்றால் கட்டியுள்ளனர். அணிகலன் ஒன்று வயிற்றுப்பகுதி வரை தொங்கிய நிலையில் சூலாயுதம் கட்டப்பட்டுள்ளது. இடை மெலிந்தும், கீழாடை இடுப்பு அணிகலன்களோடு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் வாகனமான கலைமான் சுருங்கிய கொம்புகளுடன் மிக அழகாக முகப் பகுதி செதுக்கப்பட்டிருக்கிறது. கொற்றவை சிலையின் உருவ அமைப்பைக் கொண்டு பார்க்கும் போது முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த அரிய வகை சிலையாக கருதப்படுகிறது.

    சிலையை மாங்குடி, பெருமாள்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சுத்தம் செய்து அங்கு உள்ள ஆலமரத்தின் கீழ் நிறுத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி கூறும்போது, ஆவுடையாபுரம் பகுதியில் ஏற்கனவே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி சிலை, தமிழ் கல்வெட்டு, விநாயகர் சிலை மற்றும் பல கல்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பழமையான கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோவில் அழிந்திருக்கலாம் என்பதை கள ஆய்வின் மூலமாக இப்பகுதி வரலாற்றை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

    Next Story
    ×