search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது

    மதுரை மார்க்கெட்டுக்கு காய்கறிகளும், பழங்களும் அதிக அளவில் வருவதால் சில நாட்களுக்கு முன்பு விற்பனை ஆன விலையில் பாதி விலைக்கு தற்போது காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    மதுரை:

    கொரோனா பாதிப்பு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை மட்டுமே கடந்த சில வாரங்களாக வாங்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெரிசலை தவிர்க்க மக்களின் தேவைக்காக தற்காலிய இடங்களில் மார்க்கெட்டுகள் மாற்றப்பட்டது.

    மதுரை மாட்டுத்தாவணியில் செயல்பட்டு வந்த சென்ட்ரல் மொத்த காய்கறி மார்க்கெட் மாட்டுத்தாவணி பஸ் நிலைய பின்பகுதிக்கு மாற்றப்பட்டது.

    சில்லரை விற்பனைக்காக மதுரையில் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மதுரை மார்க்கெட்டுக்கு காய்கறிகளும், பழங்களும் அதிக அளவில் வருவதால் அதன் விலை குறைந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு விற்பனை ஆன விலையில் பாதி விலைக்கு தற்போது காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் கேரட், உருளைக்கிழங்கு கிலோ ரூ. 20-க்கும், பெரிய வெங்காயம் ரூ. 15-க்கும், சின்ன வெங்காயம் ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சவ்சவ், கோஸ், கத்தரிக்காய், தக்காளி ரூ.10-க்கும், பீட்ரூட் ரூ.12-க்கும், மிளகாய் ரூ. 18-க்கும் விற்கப்படுகிறது. அவரை, முருங்கைக்காய் ரூ. 20-க்கு விற்னை ஆகிறது. கடந்த வாரம் விற்பனை விலையை ஒப்பிடும்போது பாதியாக விலை குறைந்துள்ளது.

    மேலும் பட்டர்பீன்ஸ், சோயாபீன்ஸ், கொத்தமல்லி ஆகியவற்றின் வரத்து குறைவாக உள்ளதால் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சில்லரை காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ. 20 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரிகள் சங்க தலைவர் பி.எஸ்.முருகன் கூறியதாவது:-

    தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. விழாக்கள் குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெறாததால் காய்கறிகள் அதிக வரத்து இருந்தும் விற்பனை குறைவாக உள்ளது.

    சில நாட்களாக காய்கறிகள் விலை இறங்கு முகமாக இருந்து வருகிறது. மழை தொடர்ந்தால் காய்கறி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    தற்போது காய்கறி விவசாயிகள் உற்பத்தி செலவைக்கூட சரிகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளும் காய்கறிகளை விற்க முடியாத சூழலில் தவிக்கும் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×