search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான தேனி-தூத்துக்குடி

    தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பினர். இதனால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக அவை மாறின.
    தேனி:

    உலகையே அச்சுறுத்தி உள்ள கொரோனா வைரஸ் தேனி மாவட்டத்தையும் கடந்த மாதம் அதிர வைத்தது. மாவட்டத்தில் 43 பேர் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 23 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பி வந்தவர்கள். மற்றவர்கள் அவர்களின் குடும்பத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது. இதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியபடி இருந்தனர். நேற்று முன்தினம் வரை 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    8 வயது சிறுமி உள்பட 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களும் நேற்று குணமடைந்தனர். அவர்கள் 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்கள் தேனி அல்லிநகரம் மற்றும் போடி பகுதியை சேர்ந்தவர்கள்.

    இதையடுத்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தேனி மாறி உள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை சமூக பரவல் கண்டறியப்படவில்லை. கடந்த மாதம் 17-ந் தேதிக்கு பின்னர் மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டு இருந்தன. இதில் தேனி மாவட்டம் சிவப்பு மண்டலமாக இருந்தது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிப்பு குறைந்ததால், நேற்று காலையில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டது. இவ்வாறு மாற்றப்பட்ட பின்னரே, சிகிச்சையில் இருந்த 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், அடுத்த சில நாட்களிலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படாவிட்டால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக தேனி மாவட்டம் மாற வாய்ப்புள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள், அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் ஆக மொத்தம் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 25 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். பசுவந்தனையை சேர்ந்த ஒரு மூதாட்டி கடைசியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பும், நேற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவரை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, அந்த பெண்ணுக்கு பழங்கள் வழங்கினார். தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்கி, கைதட்டி வழியனுப்பி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது. விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×