search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து பார்வையிட்ட காட்சி.
    X
    புதிய கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து பார்வையிட்ட காட்சி.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க வசதியாக ரூ.1 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்தியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க வசதியாக ரூ.1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத், வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, ஆஸ்பத்திரி டீன் அசோகன், இருப்பிட மருத்துவ அதிகாரி பொன்முடிசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு சிறுநீரகம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. எனவே நாள்தோறும் புறநோயாளிகள் பிரிவுக்கு தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வருகின்றனர். மேலும் 1,300 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எனவே உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் அல்லது உதவியாளர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், இரவில் தங்கிக்கொள்ளவும் வசதியாக ரூ.1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதில் 160 பேர் தங்குவதற்கு தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. எனவே இந்த கட்டிடத்தை முறையாக பயன்படுத்துவதுடன், தூய்மையாக வைத்திருந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×