search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டிருந்த போது எடுத்த படம்.
    X
    முக கவசம் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டிருந்த போது எடுத்த படம்.

    முக கவசம் தயாரித்து வழங்கும் ஆயுதப்படை பெண் போலீசார்

    சென்னை போலீசாருக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கும் பணியில் சென்னை ஆயுதப்படை பெண் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை :

    கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொருவரும் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக தற்போது 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஆனால் போலீசார் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது. பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.

    இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் முகக்கவசத்தை அணிந்து கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். முகக்கவசத்தை அணிந்து கொண்டுதான் அவர்கள் காவல் பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை எழும்பூர் ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் போலீசார் சிலர் வித்தியாசமான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தையல் தொழில் தெரிந்த 30 பெண் போலீசார், தங்களது வீட்டில் உள்ள தையல் எந்திரங்களை ஒட்டுமொத்தமாக எடுத்து வந்து ஒரே இடத்தில் வைத்து, முக கவசம் தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக 60 ஆயிரம் முகக்கவசங்களை தயாரித்து, சென்னை மாநகர போலீசாருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்திரராஜன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ரூ.3 லட்சம் நிதியை கொடுத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். முக கவசம் மட்டும் அல்லாமல், கைகளை கழுவ உதவும் கிருமிநாசினி தயாரிக்கும் பணியும், எழும்பூரில் எனது அலுவலகத்திற்கு மேல் உள்ள மாநாட்டு கூடத்தில் கடந்த 2 நாட்களாக நடக்கிறது.

    இதற்காக 30 பெண் போலீசாரும், 10 ஆண் போலீசாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிருமிநாசினி தயாரிக்கும் பணிக்கு ஆண் போலீசாரும், முககவசம் தாயாரிக்கும் பணிக்கு பெண் போலீசாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கிருமிநாசினி தயாரிப்பு பணிக்கு கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த போலீஸ் துறை இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ராஜீவ்காந்தி அரசு மருத்துமனை டாக்டர்கள் நேரில் வந்து பயிற்சி கொடுத்தனர். முக கவசம் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை காங்கேயத்தில் இருந்து போலீஸ் வாகனத்தில் சென்று வாங்கி வந்துள்ளோம்.

    ஒரு முக கவசம் தயாரிக்க அடக்க செலவு ரூ.1.50-தான் ஆகிறது. மூலப்பொருட்கள் மட்டும்தான் எங்களுக்கு செலவு. மற்றவற்றை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.

    தினமும் 2 ஆயிரம் முக கவசம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தினமும் 500 லிட்டர் கிருமிநாசினி தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இவற்றை சென்னை போலீசுக்கு இலவசமாக வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே சிறைத்துறையில் கைதிகள் வாயிலாக தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் முக கவசம் தயாரிக்கும் பணி நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×