search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை

    சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் வரும் நிலையில் தொடர்பில் இருந்த 80 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
    சேலம்:

    இந்தோனேசியாவில் இருந்து கடந்த 11-ந் தேதி மத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முஸ்லீம்கள் 11 பேர் சேலம் வந்தனர்.

    12-ந் தேதி அவர்கள் சூரமங்கலம் ரஹ்மத்நகர் மசூதி, 13 முதல் 15-ந் தேதி வரை செவ்வாய்ப்பேட்டை பால்மார்க்கெட் மசூதி, 19 முதல் 21-ந் தேதி வரை சன்னியாசி குண்டு புகாரியா மசூதி, 22-ந் தேதி கிச்சிப்பாளையம் ஜனாத்தூர் பிர்தோஷ் மசூதி ஆகிய இடங்களில் தங்கி பலரையும் சந்தித்து மத போதனை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இதனை அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் இந்தோனேசியாவில் இருந்து வந்த 11 பேர் மற்றும் அவருடன் வந்த வழிகாட்டி ஒருவர் மற்றும் அவர்களுடன் தங்கியிருந்த 4 பேர் என 16 பேரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சளி உள்பட கெரோனா பரிசோதனைகளை நடத்தினர்.

    இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 15 வயது , 38 வயது , 48 வயது , 57 வயது மத போதகர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த 63 வயது வழிகாட்டி ஆகிய 5 பேருக்கும் கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அரசு மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி அவர்களுக்கு கெரோனோ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 11 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே மத போதகர்கள் தங்கியிருந்த மசூதிகள் உள்பட அந்த பகுதிகள் அனைத்தும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. மதபோதனையில் போதகர்களுடன் பங்கேற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் சம்பந்தபட்ட நாட்களில் மசூதிக்கு வந்து சென்றவர்கள் மசூதியில் பணியில் ஈடுபட்டவர்கள் அவர்கள் குடும்பத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கைகளில் முத்திரை வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு அனைவரும் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று அல்லது அறிகுறி இருப்பது தெரிய வந்தால் உடனடியாக சுகாதார துறையினருக்கு தகவல் தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனிமைபடுத்தப்பட்டவர்கள் வெளியில் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட மசூதிகள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் வெளியாட்களின் நடமாட்டத்தை தவிர்க்க தடுப்பு அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், கண்காணிப்புக்குள் வராதவர்கள் இருப்பின் அவர்கள் தாங்களாகவே முன் வந்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:- கெரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேருக்கும் அரசு மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×