search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னப்பள்ளம் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ
    X
    சின்னப்பள்ளம் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

    கொடைக்கானலில் 3-வது நாளாக இரவு பகலாக கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ

    கொடைக்கானலில் 3-வது நாளாக இரவு பகலாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் சின்னபள்ளம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள பேரிக்காய் தோட்டங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக கோவில்பட்டி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ அருகில் உள்ள இடங்களுக்கும் பரவி வருகிறது.

    இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் அழிந்து வருவதுடன் பல அரிய வகை மரங்களும் தீயில் எரிந்து சாம்பலாகி வருகின்றன. அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் குறுகலான சாலை என்பதாலும் இங்கு தீயணைப்புத்துறையினரோ, வனத்துறையினரோ செல்ல முடியவில்லை. எனவே மலைவாழ் கிராம மக்களை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக இரவு பகலாக எரியும் காட்டுத்தீயால் பச்சைமரத்துஓடை, சின்ன பள்ளம் ஆகிய கிராமங்கள் புகைமண்டலமாக காட்சி அளித்து வருகின்றன. இதனால் அங்கு வசிக்கும் மலை கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதியில் எவ்வித பாதுகாப்புமின்றி தோட்டங்களை சுத்தம் செய்து தீ வைக்கும் சம்பவங்களால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் வன விலங்குகள் இடம் பெயர்ந்து செல்லும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் கோடைகாலத்தில் இதுபோன்ற காட்டுத்தீ ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. தற்போது கோடைகாலத்தின் துவக்கத்திலேயே மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் நிரந்தரமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண சிறிய ரக வாகனங்கள் அல்லது ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் அரசு உதவ வேண்டும். வனப்பகுதியில் தீ வைக்கும் நபர்கள் யார்? என்பதை அறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


    Next Story
    ×