search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு திருப்பூர் தெற்கு போலீ்ஸ் நிலையத்தில் மனு கொடுக்க வந்தவர்களை காணலாம்.
    X
    பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு திருப்பூர் தெற்கு போலீ்ஸ் நிலையத்தில் மனு கொடுக்க வந்தவர்களை காணலாம்.

    பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு

    திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக இன்று பேரணி நடைபெறும் நிலையில், பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
    திருப்பூர் :

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம், சாலை மறியல், ரெயில் மறியல், தொடர் தர்ணா போராட்டம் என்பது உள்பட ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதாவினர், இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பலவும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி, வாகன பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனால் திருப்பூரில் ஒருவிதமான அசாதரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பா.ஜனதா சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி நடைபெற உள்ளது.

    இந்த சூழலில் பேரணி நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்து பிரியாணி கடை உரிமையாளர்கள் தங்களது பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக சி.டி.சி. கார்னர், பெரியக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பிரியாணிக்கடை நடத்தி வருகிறோம்.

    இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சி.டி.சி. கார்னர் பகுதியில் இருந்து பெரியக்கடை வீதி வழியாக பா.ஜனதா சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இதனால் எங்கள் கடைக்கும், எங்களது பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து பிரியாணிக்கடை உரிமையாளர்கள் கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் சி.டி.சி. கார்னர் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே எங்களது பிரியாணி அண்டாக்கள் மற்றும் செல்போன் கடைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த சட்டத்திற்கு எதிராக 2 மாதங்களாக போராடி வருகிறோம்.

    கோவையில் இந்து அமைப்பு சார்பில் நடந்த ஊர்வலத்தில் அங்கு பூட்டப்பட்ட அனைத்து கடைகளும் உடைக்கப்பட்டன. மேலும், பிரியாணி அண்டாக்களும் தூக்கி செல்லப்பட்டது. மக்களின் பொதுசொத்துகளும் சேதப்படுத்தப்பட்டது. ஆனால் முஸ்லிம்களால் நடத்தப்படும் போராட்டத்தில் எந்த ஒரு சேதமும் இதுவரை நடைபெறவில்லை. எனவே இந்த பேரணியின் போது எங்களது கடைகளுக்கும், பிரியாணி அண்டாக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த மனு மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×