search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணமேடையில் வாளால் கேக் வெட்டிய புதுமண தம்பதி
    X
    மணமேடையில் வாளால் கேக் வெட்டிய புதுமண தம்பதி

    திருமண வரவேற்பில் பட்டாகத்தியில் கேக் வெட்டினர் - ரூட்டுதல மாணவர் உள்பட 10 பேரை பிடிக்க வேட்டை

    திருமண வரவேற்பில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து ரூட்டுதல மாணவர் உள்பட 10 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    திருவேற்காடு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த திருமண வரவேற்பில் வாலிபர்கள் சிலர் மணமக்களிடம் பட்டாக் கத்தியை கொடுத்து கேக்கை வெட்ட வற்புறுத்தினர்.

    பட்டாக்கத்தியை வாங்கிய மணமக்கள் அதனை வைத்து கேக் வெட்டி உற்சாகமடைந்தனர். அப்போது வாலிபர் ஒருவரும் பட்டாக்கத்தியை சுழற்றுகிறார்.

    இதனை கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினார்.

    ரவுடி பினு ஸ்டைலில் பட்டாக்கத்தியால் புதுமண தம்பதிகள் கேக் வெட்டிய வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி போலீசாருக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து போலீசார் வீடியோவில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருவேற்காட்டை அடுத்த சின்னகோலடியை சேர்ந்த புவனேஷ்-நந்தினி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது தெரிய வந்தது.

    மேலும் பட்டாக்கத்தியை மணமக்களிடம் கொடுத்ததும் பட்டாக்கத்தியை சுழற்றியதும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

    மணமகன் புவனேஷ் பச்சையப்பன் கல்லூரியில் 2017-ம் ஆண்டு பி.ஏ. முடித்துள்ளார். அவர் நந்தினியை காதல் திருமணம் செய்து உள்ளார்.

    இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பச்சையப்பன் கல்லூரியில் முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள், ரூட் தல மாணவர்கள் கும்பலாக கலந்து கொண்டு கேக்கை வாங்கி வந்து மணமக்களை பட்டாக்கத்தியால் வெட்ட கூறியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து மணமகன் புவனேஷ், அவரது நண்பர்கள் விக்கி, நிஷாந்த், மணி, கண்ணன் உள்ளிட்டோரை போலீசார் நேற்று பிடித்தனர். அவர்களை பெற்றோருடன் அழைத்து வந்து அம்பத்தூர் துணை போலீஸ் கமி‌ஷனர் ஈஸ்வரன் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் அனைவரிடமும் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டோம் என உறுதிமொழி வாங்கி கொண்டு எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    வீடியோவில் பட்டாக்கத்தியை சுழற்றியது பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் அயனம்பாக்கத்தை சேர்ந்த மணி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த மோகனகுமார் மற்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர்.

    மோகனகுமார் ஏற்கனவே ரூட் தல பிரச்சினையில் சிக்கி உள்ளவர் ஆவார். போலீசாரால் தேடப்படுபவர்கள் அனைவரும் பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருபவர்கள். போலீசாருக்கு பயந்து அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

    அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனை அறிந்ததும் நேற்று முதல் சில மாணவர்கள் பெற்றோருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் பெற்றோரின் முன்பு போலீசார் கண்டித்து எழுதி வாங்கி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறியதாவது:-

    “திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்கள் அனைவரையும் பிடித்து எச்சரித்து வருகிறோம். மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டோம்.

    ஆனால் இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் அழைத்து பெற்றோரின் முன்பு எச்சரிக்கை செய்வோம். இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட கூடாது. அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மாணவர்களின் நடத்தையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்” என்றார்.
    Next Story
    ×