search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்னிபஸ் மோதியதில் உருக்குலைந்த அரசு பஸ், கார்.
    X
    ஆம்னிபஸ் மோதியதில் உருக்குலைந்த அரசு பஸ், கார்.

    உளுந்தூர்பேட்டை அருகே கார்-அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: 4 பேர் பலி

    உளுந்தூர்பேட்டை அருகே கார்-அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 22 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் கண்ணன் நகரை சேர்ந்தவர் ஐசக் (வயது 54). இவர் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் ஆவார்.

    இவரது மகன் ராஜன் விண்ணரசு (27). இவர் கல்வி நிறுவனங்கள் நடத்தி வந்தார். இவருக்கு பெண் நிச்சயம் செய்வதற்காக ஐசக் ஒரு காரில் தனது குடும்பத்துடன் திருநெல்வேலி சென்றார்.

    நிச்சயதார்த்தம் முடிந்து அங்கிருந்து காரில் அரக்கோணம் நோக்கி வந்தனர். இந்த காரை அரக்கோணம் பகுதியை சேர்ந்த டிரைவர் வினோத் (25) ஓட்டி வந்தார்.

    இந்த கார் இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் காரின் பக்கவாட்டில் உரசியது. இதனால் அதிர்ச்சியடைந்த கார் டிரைவர் வினோத் வேகமாக சென்று பஸ்சின் முன்பு குறுக்கே சென்று மறித்தார். உடனே பஸ் அங்கு நிறுத்தப்பட்டது.

    அப்போது அரசு பஸ் டிரைவர் கோவிந்தராஜ் என்பவருக்கும், கார் டிரைவர் வினோத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த பஸ்சில் இருந்த பயணிகள் ஏராளமானோர் கீழே இறங்கி வந்தனர். அவர்கள் கார் டிரைவரிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஆம்னி பஸ் வேகமாக வந்தது. இந்த பஸ் எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மற்றும் கார் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கல்வி நிறுவனர் ராஜன் விண்ணரசு அரசு பஸ்சில் வந்த புதுக்கோட்டை ஆயக்குடியை சேர்ந்த வெள்ளைச்சாமி (33), காஞ்சிபுரம் அருகே உள்ள மின்னல் சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த சற்குணன் (34) மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும் இந்த விபத்தில் அரசு பஸ்சில் வந்த மதியழகன் (51), சிந்து (19), மீனா (11), ஜானகி (70), அரசு பஸ் டிரைவர் கோவிந்தராஜ், சுப்பிரமணியன் (30), காரில் வந்த ஐசக் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த 22 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுபற்றி அறிந்த எடைக்கல் போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான 4 பேர் உடலை மீட்டு பிரேத பரிசேதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. உடனே கூடுதல் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
    Next Story
    ×