search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டி

    தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

    பெறப்பட்ட வேட்புமனுக்களில் 3 ஆயிரத்து 643 வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன. மேலும் 48 ஆயிரத்து 891 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் இறுதியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.

    கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 76 ஆயிரத்து 746 பதவியிடங்களுக்கு 2 லட்சத்து 9 ஆயிரத்து 847 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 1,994 வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பின்பு நிராகரிக்கப்பட்டன. மேலும் 18 ஆயிரத்து 818 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 18 ஆயிரத்து 137 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதிப்போட்டியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 898 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தலில் 9 ஆயிரத்து 624 பதவியிடங்களுக்கு 54 ஆயிரத்து 757 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 753 வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 ஆயிரத்து 983 வேட்பு மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 410 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தலில் 35 ஆயிரத்து 611 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 5 ஆயிரத்து 90 பதவியிடங்களுக்கு 34 ஆயிரத்து 398 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் 787 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 ஆயிரத்து 812 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன.

    23 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 67 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 22 ஆயிரத்து 776 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

    515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவியிடங்களுக்கு 3 ஆயிரத்து 992 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் உரிய பரிசீலனைக்கு பின்னர் 109 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 1,278 வேட்பு மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 2 ஆயிரத்து 605 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    வாக்காளர்கள் பட்டியல்

    தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சில இடங்களில் வாக்காளர்களை கவர்வதற்காக பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலின்போது பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக பறக்கும் படை அமைக்கப்படுவது வழக்கம். தற்போது உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்முறையாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையிலும், தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.

    ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்தது. ஆனால் அவர்களுடைய செல்போன் எண்கள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை அவர்களிடம் தெரிவிப்பதில் பொதுமக்களுக்கு சிரமம் நேரிட்டது. இந்தநிலையில் அவர்களுடைய செல்போன் எண்களை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஏ.ஞானசேகரன் செல்போன் எண் 94450 01100 ஆகும்.

    Next Story
    ×