search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த காட்சி.
    X
    வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த காட்சி.

    காரைக்காலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

    காரைக்காலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    காரைக்கால்:

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளும் அடுத்து வர உள்ளது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர் காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபானங்களை பதுக்கி வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் கடத்துவதாக காரைக்கால் மாவட்ட சப்-கலெக்டர் ஆதர்ஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் தீவிர சோதனை நடத்துமாறு போலீசாருக்கு சப்-கலெக்டர் ஆதர்ஸ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் காரைக்கால் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், தாசில்தார்கள் சரவணன், பொய்யாதமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் காரைக்கால் பகுதியில் நேற்று நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காரைக்கால் தீம்ஸ்பார்க் பகுதியில் உள்ள 3-வது குறுக்குதெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர் ஒரு வீட்டில் இருந்த அட்டை பெட்டிகளை எடுத்து வந்து லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

    போலீசார் அங்கு வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பிஓடிவிட்டனர்.

    பின்னர் அந்த லாரியில் இருந்த அட்டை பெட்டிகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் ஏராளமான மதுபாட்டில் கள் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கும் ஏராளமான அட்டைபெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    அந்த அட்டைபெட்டிகளிலும் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது. மேலும் அந்த வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அங்கிருந்த மதுபாட்டில்களை சோதனை செய்தபோது அவை அனைத்தும் போலியான மதுபானங்களை தயாரித்து பாட்டில்களில் அடைத்து போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த போலி மதுபாட்டில்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரி மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டை போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீடு காரைக்காலை அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர் பிரபல சாராய வியாபாரி என்பதும் தெரியவந்தது.

    இந்த போலி மதுபாட்டில்கள் தயாரிப்பில் சுரேசுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், போலி மதுபானங்கள் எந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு தற்போது இங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மர்மமனிதர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டை சப்-கலெக்டர் ஆதர்ஸ் தலைமையிலான அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.

    Next Story
    ×