search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன வெங்காயம்
    X
    சின்ன வெங்காயம்

    பெரம்பலூர் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு - விவசாயிகள் அச்சம்

    பெரம்பலூர் அருகே ரூ.40,000 மதிப்புள்ள 400 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காயம் சாகுபடியில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு வயல்களில் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை பாதுகாக்க வயலிலேயே பட்டறை அமைத்து பாதுகாப்பது வழக்கம்.

    பெரும்பாலான வயல்களின் ஓரத்தில் வெங்காய பட்டறைகள் இருந்தபோதிலும் வெங்காயம் திருட்டு என்பது நடைபெற்றது இல்லை. விதைப்பதற்கு வாங்கி வயலில் வைத்திருக்கும் வெங்காயம் திருடு போய்விட்டது என விவசாயிகள் கூறுவது மிகக்குறைவு.

    உற்பத்தி குறைவு, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்செல்வது தொடர்கிறது.

    கூத்தனூர், செங்குணம் ஆகிய இடங்களில் இதற்கு முன்பாக திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தில் தற்போது 400 கிலோ வெங்காயம் திருடு போயுள்ளது. இரூரைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 48) நாரணமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகிறார்.

    புரட்டாசி பட்டத்தில் நடவு செய்த சின்ன வெங்காயத்தை சமீபத்தில் அறுவடை செய்து அவரது வயலிலேயே குவித்து வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வயலுக்கு சென்ற செல்வராஜ் வயலில் குவித்து வைத்திருந்த வெங்காயத்தில் ஒரு பகுதி திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    400 கிலோ வெங்காயம் திருடு போனதாகவும், அதன் மதிப்பு ரூ.40,000 எனவும் செல்வராஜ் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சின்ன வெங்காய திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வயல்களில் வெங்காய பட்டறை அமைத்துள்ள விவசாயிகளும், அறுவடை செய்து விற்பனைக்காக வயலிலேயே குவித்து வைத்திருக்கும் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×