search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    கிரண்பேடியின் பூச்சாண்டிக்கு நான் பயப்பட மாட்டேன் - நாராயணசாமி ஆவேசம்

    கவர்னர் கிரண்பேடியின் பூச்சாண்டிக்கு நான் பயப்பட மாட்டேன் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டியின்போது கூறியதாவது:

    புதுவை முதல்-அமைச்சர் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது பெற்ற கடனுக்கு வட்டி, அசலை செலுத்தி வருகிறோம். கடந்த மார்ச் மாதம் கடனுக்கான வட்டி ரூ.300 கோடியை செலுத்தினோம். இந்த மாதம் 9-ந் தேதி அசல் ரூ.500 கோடியை கட்டியுள்ளோம்.

    மத்திய அரசு நிதி தராததாலும், ஜி.எஸ்.டி. இழப்பீடு கிடைக்காததாலும் மாநிலத்தில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய நிதி மந்திரி இந்நிலையை புரிந்துகொண்டு நிதி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் கலவரம் பற்றி எரிந்து வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு பலமிருக்கிறது என்பதால் பாராளுமன்ற இரு அவையிலும் நிறைவேற்றியுள்ளனர். இதை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் படிப்படியாக அதிகரித்து தற்போது மாணவர்கள் போராட்டமாக வெடித்துள்ளது.

    டெல்லியில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டு கிடக்கிறது. குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் மாற்றம் கொண்டுவருவோம் என அமித்ஷா கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து கவர்னர் செய்திருந்த மேல்முறையீட்டின் மீது விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் தவறான கருத்தை கவர்னர் பதிவு செய்தார். கவர்னர் மாளிகைக்கு அதிகாரிகளை அழைத்து பேசுவதாகவும், ஆனால் உத்தரவிடவில்லை என்றும் கூறியுள்ளார். தனக்கு வரும் புகார்களை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அரசு துறைகளுக்கு கவர்னர் அனுப்பும் கடிதத்தில் டேக் ஆக்‌ஷன் அண்ட் ரிப்போர்ட் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் மூலம் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிடுவது தெளிவாகியுள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக சான்றுகளை சமர்பித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டே தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடக்கூடாது என கூறியுள்ளது.

    ஆனால், தொடர்ந்து கவர்னர் தனது அதிகார வரம்பை மீறி அரசின் அதிகாரத்தில் தலையிட்டு வருகிறார். அதேசமயத்தில் கோர்ட்டிற்கு பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்.

    கவர்னர் நீதிமன்றத்தை அவமதித்து வருவதாக நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். காவல்துறையின் மந்திரியாக நான் உள்ளேன். எனக்கே தெரியாமல் காவல் துறை பீட் அதிகாரிகள் கூட்டத்தை கவர்னர் நடத்தியுள்ளார். இதுபோல தேவையில்லாமல் பல கோப்புகளை காலதாமதப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புகிறார்.

    இருப்பினும் காவலர் வயது வரம்பை தளர்த்தியது, விவசாய கடன் தள்ளுபடி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணித்திறன் மதிப்பீடு கோப்பு உள்ளிட்ட பல கோப்புகளுக்கு மத்திய அரசு மாநில அரசின் கருத்தையே ஏற்றுள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மத்திய அரசு கவர்னரை நம்பவில்லை என்பது தெரிகிறது.

    கவர்னர் கிரண்பேடி

    மத்திய அரசு நம்பாதபோது கவர்னர் கிரண்பேடி தார்மீகரீதியாக ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதிகாரிகளை அழைத்து மிரட்டுவது, வசைபாடுவது, சி.பி.ஐ.யை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என கூறுவது கவர்னருக்கு அழகல்ல.. நான் சி.பி.ஐ. அமைச்சராக இருந்துள்ளேன். கிரண்பேடியின் இதுபோன்ற பூச்சாண்டி வேலைகளை நிறைய பார்த்துள்ளேன். இந்த பூச்சாண்டி வேலைகள் என்னிடம் பலிக்காது. அதிகாரிகளுக்கு கவர்னர் மன உளைச்சல் கொடுப்பதை நான் ஏற்க மாட்டேன்.

    பொங்கல் பொருட்கள் இந்த ஆண்டு கண்டிப்பாக விநியோகம் செய்வோம். பொருட்களாக வழங்குவதா, பணமாக வழங்குவதா என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ஜான்குமார் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

    Next Story
    ×