search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    மளிகை கடைகளில் சாம்பார் வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை

    சென்னை மளிகை கடைகளில் சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    வெங்காயம் விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறையத் தொடங்கி உள்ளது.

    கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் பெய்த பருவ மழை காரணமாக பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் விலை ரூ.200 வரை உயர்ந்தது. மேலும் சாம்பார் வெங்காயம் விலையும், உச்சத்தில் இருந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. விளைகின்ற பகுதிகளில் இருந்து மொத்தமாக வாங்கி கூட்டுறவு கடைகளில் ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் எகிப்து நாட்டில் இருந்தும் வெங்காயத்தை வியாபாரிகள் நேரடியாக இறக்குமதி செய்து கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக 60, 70 லாரிகளில் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தது. ஆனால் ஒரு மாதமாக 20, 30 லாரிகளில் பெரிய வெங்காயம் வருகிறது. வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்வாக இருந்தது.

    ஆனால் கடந்த சில நாட் களாக வெங்காயம் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் மீண்டும் வரத் தொடங்கி இருப்பதால் உச்சத்தில் இருந்த விலை குறைந்து வருகிறது. கடந்த நாட்களில் 25, 30 லாரிகளில் வந்த வெங்காயம் இன்று 60 லாரிகளாக உயர்ந்துள்ளது. வெங்காயம் வரத்து அதிகரித்து வருவதால் விலை படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் எகிப்து வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கிறது. நாசிக் வெங்காயம் முதல் தரம் ரூ.90, 2-ம் தரம் ரூ.60 க்கு விற்கப்படுகிறது.

    ஆந்திர வெங்காயம் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் நாசிக் வெங்காயம் ரூ.100, ஆந்திரா வெங்காயம் ரூ.80க்கும் விற்கப்படுகிறது.

    இதுகுறித்து மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் கூறுகையில், வெங்காயம் வரத்து அதிகரித்து வருவதால் நேற்றைய விலையை விட இன்று ரூ.20 குறைந்துள்ளது. நாசிக் வெங்காயம் கிலோ ரூ.120 க்கும், ஆந்திர வெங்காயம் ரூ.90 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத இறுதியில் விலை மேலும் சரிவடையும் என்றார்.

    சாம்பார் வெங்காயம் விலை குறையவில்லை. இன்று கிலோ ரூ.130 க்கு விற்கப்படுகிறது. ஈரமான வெங்காயம் சிறியது ரூ.50, பெரியது ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    பெரிய வெங்காயம் விலை குறைந்து வரும் நிலையில் அதனை சில்லறை வியாபாரிகள் இன்னும் அதிக விலைக்கே விற்கிறார்கள். சென்னையில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகளில் வெங்காயம் விலை குறையாததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    அயனாவரம், அம்பத்தூர், புழல் பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது.

    இன்று காலையில் பெய்த மழையால் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரம் பாதித்தது. பெரும்பாலான வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால் வெங்காயம் விலை மேலும் குறைக்கப்பட்டது.

    Next Story
    ×