search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 நம்பர் லாட்டரி
    X
    3 நம்பர் லாட்டரி

    புதுவையிலும் 3 நம்பர் லாட்டரி அமோக விற்பனை

    புதுவையிலும் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்தகோரி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    புதுச்சேரி:

    விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை இழந்ததால் நகை வியாபாரி அருண்குமார் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் 3 நம்பர் லாட்டரியால் நான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறேன் என்று வீடி யோவில் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்கும் வியாபாரிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், புதுவையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 

    இதன் பின்னணியில் பல பிரமுகர்கள் இருக்கிறார்கள். பெட்டிக்கடைகள், டீக்கடை மற்றும் சில கடைகளில் வியாபாரிகள் இவற்றை விற்பவர்களாக உள்ளனர். இதற்காக லாட்டரி சீட்டை நேரடியாக கொடுப்பது இல்லை. சீட்டு வாங்க விரும்புவோர் அந்த கடைக்காரர்களை அணுகி அதற்கான பணத்தை கொடுத்தால் அவர்கள் சீட்டுக்கான நம்பரை மட்டும் சொல்வார்கள். அல்லது நாமேகூட ஒரு குறிப்பிட்ட நம்பரை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த எண்ணுக்கு பரிசு விழுந்தால் பணம் கிடைக்கும். 

    இந்த வகையில் ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கும் 3 நம்பர் லாட்டரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அச்சடிக்கப்பட்ட சீட்டு எதுவும் வழங்கப்படாததால் இதை யாரும் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால் போலீசாரும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வில்லை. சில இடங்களில் இந்த லாட்டரி விற்பனை இருப்பது தெரிந்தும் போலீசார் மவுனம் காக்கிறார்கள். ஏற்கனவே லாட்டரி சீட்டு ஒழிக்கப்பட்ட நிலையில் சுரண்டல் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி, போலி லாட்டரி என பலவும் வலம் வந்தன. அவை தற்போது ஒழிந்து விட்ட நிலையில் 3 நம்பர் லாட்டரி முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

    சிலர் கடைக்காரர்களுடன் நல்ல பழக்கத்தை வைத்துக் கொண்டு போனிலேயே நம்பரை வாங்கிக் கொள்கிறார்கள். பின்னர் அதற்கான பணத்தை கடன் முறையில் திரும்ப செலுத்துகிறார்கள். புதுவையில் இந்த லாட்டரியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், யாரும் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. போலீசார் இதில் உடனடியாக தலையிட்டு இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்களை கைது செய்தால் இந்த லாட்டரியை ஒழிக்க முடியும். அப்பாவி மக்களின் உழைப்பை சுரண்டும் இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    Next Story
    ×