search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊருக்குள் புகுந்த யானைக்கூட்டம்.
    X
    ஊருக்குள் புகுந்த யானைக்கூட்டம்.

    ராயக்கோட்டை அருகே 20 யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

    ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலை 20 யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ராயக்கோட்டை:

    கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தது.

    அந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்தது. இதனால் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து ஓசூர் வனத்துறையினர் 60-க்கும் மேற்பட்ட யானைகளை சானமாவு பகுதியில் இருந்து விரட்டியடித்தனர். பின்னர் அந்த யானைகள் ஓசூரை அடுத்த ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

    அதில் 40 யானைகள் மட்டும் ஊடேதுர்க்கம் வனப் பகுதிக்குள் தஞ்சமடைந்தது. 20-க்கும் மேற்பட்ட யானைகள் குழுவாக பிரிந்து தனியாக சென்றன.

    அந்த 20-க்கும் மேற்பட்ட யானைகள் இன்று அதிகாலை ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டி, கருத்தம்பட்டி, தேவசந்திரம் வழியாக மெட்டரை கிராமத்திற்குள் புகுந்தது. 20 யானைகளும் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதனை கண்ட அந்த பகுதி விவசாயிகள் மேளதாளம் அடித்து அந்த யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானைகள் ஊர் பொதுமக்களை துரத்தி விரட்டியது. இதனால் ஊர் பொதுமக்கள் நாலபுறமும் சிதறி ஓடினர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் வனசரகர் சீதாராமன், ராயக்கோட்டை வனசரகர் முருகேசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை ஊடே துர்க்கம் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க முயற்சித்தனர்.

    அப்போது பொதுமக்கள் செய்த இடையூறால் மீண்டும் அந்த யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் வனத்துறையினர் மற்றும் போலீசார் ஊர்பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் சத்தம் எழுப்பியும் யானைகளை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    லிங்கனம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் 20-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் யாரும் தனியாக வெளியே வர வேண்டாம் என்றும், வீட்டின் முன்பு விளக்குகளை எரிய விட்டபடியே இருக்க செய்ய வேண்டும் என்று வனத்துறையினர் ஒலிபெருக்கில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் லிங்கனம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அந்த பகுதி கிராம மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    இதற்கிடையே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்குள் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று தேன்கனிக்கோட்டை ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தது. இதுகுறித்து ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அந்த யானைகளை ஊடே துர்க்கம் வனப்பகுதிகள் விரட்டியடித்தனர்.

    ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் மொத்தம் 75-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளது. அந்த யானைகள் தனித்தனி குழுவாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, போன்ற ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×