search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிப்பூ (கோப்புப்படம்)
    X
    மல்லிப்பூ (கோப்புப்படம்)

    தோவாளை மார்க்கெட்டில் இன்று மல்லிப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

    தோவாளை மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக இன்று ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை ரூ. 3 ஆயிரமாக உயர்ந்தது.
    நாகர்கோவில்:

    தோவாளை பூ மார்க்கெட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    தோவாளை மார்க்கெட்டில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக நெல்லை, மதுரை, சங்கரன்கோவில், அருப்புக்கோட்டை,ஊட்டி, பெங்களூருவில் இருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    பூக்களின் வரத்துக்கு ஏற்பவே இங்கு பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்படும். பெரும்பாலும் மல்லிப்பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு மட்டுமே விலை எப்போதும் அதிகமாக இருக்கும்.

    கேரளாவில் ஓணப்பண்டிகை நேரத்தில் மல்லி மற்றும் பிச்சிப் பூக்களின் விலை கிலோ ரூ. 2 ஆயிரத்தை தாண்டி செல்லும். ஆனால் இன்று தோவாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை ரூ. 3 ஆயிரமாக உயர்ந்தது.

    நேற்று இதன் விலை கிலோவுக்கு ரூ.800 முதல் ரூ. 1000-மாக இருந்தது. இன்று ஒரே அடியாக மூன்று மடங்கு விலை உயர்ந்தது.

    இதுபோல மற்ற பூக்களின் விலையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சம்பங்கி பூ கிலோ ரூ.400-க்கு விற்பனை ஆனது. ரோஜாப்பூ ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.180, மஞ்சள்கேந்தி ரூ.100, சிவப்பு கேந்தி ரூ.120, கோழிப்பூ ரூ.80, தாமரைப்பூ ஒன்றுக்கு ரூ.10 என விற்பனை ஆனது.

    விலை உயர்வு பற்றி பூ வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, தமிழ்நாடு முழுவதும் இப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பூக்களின் உற்பத்தி குறைந்து போனது. மேலும் தோவாளை மார்க்கெட்டிற்கு வரும் பூக்களின் வரத்தும் மிகவும் குறைந்து போனது.

    வரத்து குறைந்த நேரத்தில் இன்று சூரசம்ஹாரம் மற்றும் கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் கொண்டாட்டங்கள் நடக்கிறது. இதற்காக பூக்களின் தேவை அதிகரித்து விட்டது. தேவைக்கு ஏற்ப பூக்கள் வராததால் மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது, என்றார்.
    Next Story
    ×