search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

    பெரம்பலூரில் என்.எல்.சி. என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.40ஆயிரம் கொள்ளை

    பெரம்பலூரில் என்.எல்.சி. என்ஜினீயர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் எளம்பலூர் சாலை அன்னை பருவதம்மா பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 27). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இதனால் அவர் நெய்வேலியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். அவரது தாயார் கிருஷ்ணகுமாரி பெரம்பலூரில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ்குமார் , தனது தாயை அழைத்து கொண்டு நெய்வேலிக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த நகைகளை தலையணையின் கீழ் வைத்து விட்டு, வீட்டைபூட்டி விட்டு சென்றார். இன்று காலை சுரேஷ்குமார் வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்ததுடன், பெரம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது வீட்டிற்குள் பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் பீரோவும் திறந்து கிடந்தது.

    வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு நேற்றிரவு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் நகை-பணம் இல்லாததால் வீடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது தலையணையின் கீழ் இருந்த நகை-பணத்தை திருடி சென்று பின்புறம் வழியாக தப்பி சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் 50 பவுன் நகை மற்றும் ரூ.40ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    வீட்டை பூட்டி விட்டு செல்லும் போது நகை-பணத்தை யாரும் திருடாமல் இருக்கவும், கொள்ளையர்கள் வந்தாலும் அவர்களது கண்ணில் சிக்காமல் இருக்கவும், கிருஷ்ணகுமாரி நகை-பணத்தை தலையணையின் கீழ் வைத்து விட்டு சென்றுள்ளார். இருப்பினும் அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதனால் கிருஷ்ணகுமாரி நகை-பணத்தை வைத்திருக்கும் இடத்தை அறிந்து நோட்டமிட்ட மர்மநபர்களே இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    உறவினர்கள், தெரிந்த நபர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரில் என்.எல்.சி. என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×