search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambalur Robbery"

    • வீடு முழுவதும் தரை மற்றும் சுவர்களில் ரத்தம் தெறித்து சிதறிக்கிடந்தது.
    • வீட்டின் வாசல் முதல் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 80). இவரது மனைவி பார்வதி என்ற மாக்காயி (70).

    இந்த தம்பதிக்கு மாக்காயி, காந்தி, செல்வாம்பாள், சரசு ஆகிய 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே ஊரில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். விவசாயியான மாணிக்கம் அதே ஊரின் மையப்பகுதியில் சொந்த வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    அவ்வப்போது மாணிக்கம் தம்பதியினர் மகள்கள் வீட்டுக்கு சென்று வருவதும், அதேபோல் மகள்கள் பெற்றோரை பார்க்க குழந்தைகளுடன் வந்து செல்வதும் வழக்கமாக இருந்தது.

    தனக்கான நிலபுலன்களை மகள்களுக்கு பிரித்து கொடுத்த மாணிக்கம் தங்களின் எதிர்கால தேவைக்காக நகை, பணமும் சேர்த்து வைத்திருந்தார். அதனைக் கொண்டு குடும்பம் நடத்தவும், விவசாய பணிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட செலவுகளையும் செய்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று விவசாய பணிகளை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பிய மாணிக்கம் இரவு சாப்பிட்டுவிட்டு தனது மனைவியுடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் மாணிக்கம் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கிராமம் என்பதால் தனது மகள் யாராவது வந்திருக்கலாம் என்று எண்ணி, கதவை திறந்தார். உடனே அதிரடியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் மாணிக்கத்தின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத அவர் கூச்சல் போட்டார்.

    இதைக்கேட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரது மனைவி பார்வதியும் பதறி எழுந்தார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரையும் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் இருவரையும் வீட்டிற்குள் துரத்தி துரத்தி கொடூரமாக கழுத்தை அறுத்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் சாரலுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் யாருக்கும் தம்பதியினர் போட்ட மரண ஓலம் கேட்கவில்லை.

    தினமும் அதிகாலையிலேயே எழுந்து பார்வதி வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம். ஆனால் இன்று காலை நீண்ட நேரமாகியும் வாசல் தெளிக்காமல் இருந்தது. அதே நேரம் வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் வெளியே நின்று பார்வதியை அழைத்தனர்.

    ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர்.

    அங்கு கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். வீடு முழுவதும் தரை மற்றும் சுவர்களில் ரத்தம் தெறித்து சிதறிக்கிடந்தது. மேலும் வீட்டின் வாசல் முதல் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உடனடியாக அவர்கள் அதே ஊரில் வசித்து வரும் மாணிக்கத்தின் 4 மகள்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெற்றோரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று கொலையுண்ட தம்பதியினரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்த அவர்கள் மோப்பநாய், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    வீட்டில் எவ்வளவு நகை, பணம் இருந்தது, அது கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது, கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்மநபர்கள் வந்தார்களா அல்லது முன்விரோதம், பகை காரணமாக வந்த மர்மநபர்கள் தம்பதியை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை எடுத்து சென்றார்களா, உறவினர்களே இதில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். நள்ளிரவில் வயதான தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கடை ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.
    • கொள்ளை குறித்து பாடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

    பாடலூர்:

    பெரம்பலூர் அருகே பாடலூர் பகுதியில் ஒரு அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் கடையில் விற்பனை களை கட்டியது.

    பின்னர் இரவு 9.50 மணி அளவில் சூப்பர்வைசரான பெரம்பலூர் கனரம்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 50), விற்பனையாளரான துரைமங்கலம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த ராம்குமார்( 44), உதவி விற்பனையாளரான ஜெகன் ஆகிய மூன்று பேரும் விற்பனையான பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கும்பல் கடை முன்பு திபுதிபுவென வந்து இறங்கினர்.

    அதில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை இயக்கிய படி நின்று கொண்டிருந்தனர். நான்கு பேர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்தனர். பின்னர் கடை விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ. 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரொக்க பணத்தை அள்ளிக்கொண்டு வெளியேறினர்.

    பின்னர் கடை முன்பு தயார் நிலையில் நின்ற மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கடை ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. இது பற்றி பாடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

    பெரம்பலூரில் பிரபல தொழில் அதிபரிடம் கத்தி முனையில் மர்மநபர்கள் ரூ.60 லட்சம் மதிப்பிலான 103 சவரன் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    குன்னம்:

    பெரம்பலூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 65). தொழில் அதிபர். இவர் எளம்பலூர் சாலையில் நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பரமேஸ்வரி (55). இவர்களுக்கு ரேணுகா(32), என்ற மகளும், ஆனந்த் என்ற மகனும் உள்ளனர்.

    கருப்பண்ணனுக்கு சங்குபேட்டை அருகே உள்ள சர்ச் சாலையில் பூர்வீக வீடும், எளம்பலூர் சாலையில் உள்ள நகைக்கடை மாடி மேல் ஒரு வீடும் உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு சங்குபேட்டை வீட்டில் கருப்பண்ணன் மட்டும் தங்கியுள்ளார். மனைவியும், மகளும் எளம்பலூர் சாலையில் நகைக்கடை வீட்டில் படுத்து தூங்கினர். இதற்கிடையே மகன் ஆனந்த் வேலை வி‌ஷயமாக திருச்சி சென்று விட்டார்.

    திருச்சிக்கு அவர் செல்லும் முன்பு, நான் சீக்கிரம் வந்துவிடுவேன் என்று கருப்பண்ணனிடம் கூறி சென்றுள்ளார். இதனால் கருப்பண்ணன் வீட்டின் கதவை பூட்டாமல், இரவு 11 மணியளவில், டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது முகத்தை துணியால் மூடியபடி 3 மர்மநபர்கள் திபுதிபுவென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனை பார்த்த கருப்பண்ணன் சத்தம் போட்டார். உடனே மர்மநபர்கள் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து, கத்தினால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.

    நகை (கோப்புப்படம்)

    இதனால் மிரண்டுபோன கருப்பண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி நின்றுள்ளார். அப்போது அவரிடம் பீரோ சாவியை மிரட்டி வாங்கிய மர்மநபர்கள், பீரோவை திறந்து அதிலிருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 103 சவரன் தங்க நகைகளையும். 9 கிலோ வெள்ளி பொருட்களையும், ரொக்கப் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்தனர்.

    அதன் பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கிய கொள்ளையர்கள், கருப்பண்ணனுக்கு சொந்தமான வீட்டு வாசலில் நின்றிருந்த அவரது சொகுசு காரையும் எடுத்துக்கொண்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து உடனடியாக கருப்பண்ணன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள், மர்மநபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து குறிப்பட்ட தூரம் வரை சென்று நின்றுவிட்டது.

    இச்சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி.சஞ்ஜிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    தொழிலதிபர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 


    இதையும் படியுங்கள்... புதுவகை வைரஸ் பரவல் - தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்தது அமெரிக்கா

    ×