search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரம்பலூர் அருகே கணவன்-மனைவி கழுத்தை அறுத்து கொன்று நகை, பணம் கொள்ளை
    X

    பெரம்பலூர் அருகே கணவன்-மனைவி கழுத்தை அறுத்து கொன்று நகை, பணம் கொள்ளை

    • வீடு முழுவதும் தரை மற்றும் சுவர்களில் ரத்தம் தெறித்து சிதறிக்கிடந்தது.
    • வீட்டின் வாசல் முதல் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 80). இவரது மனைவி பார்வதி என்ற மாக்காயி (70).

    இந்த தம்பதிக்கு மாக்காயி, காந்தி, செல்வாம்பாள், சரசு ஆகிய 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே ஊரில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். விவசாயியான மாணிக்கம் அதே ஊரின் மையப்பகுதியில் சொந்த வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    அவ்வப்போது மாணிக்கம் தம்பதியினர் மகள்கள் வீட்டுக்கு சென்று வருவதும், அதேபோல் மகள்கள் பெற்றோரை பார்க்க குழந்தைகளுடன் வந்து செல்வதும் வழக்கமாக இருந்தது.

    தனக்கான நிலபுலன்களை மகள்களுக்கு பிரித்து கொடுத்த மாணிக்கம் தங்களின் எதிர்கால தேவைக்காக நகை, பணமும் சேர்த்து வைத்திருந்தார். அதனைக் கொண்டு குடும்பம் நடத்தவும், விவசாய பணிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட செலவுகளையும் செய்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று விவசாய பணிகளை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பிய மாணிக்கம் இரவு சாப்பிட்டுவிட்டு தனது மனைவியுடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் மாணிக்கம் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கிராமம் என்பதால் தனது மகள் யாராவது வந்திருக்கலாம் என்று எண்ணி, கதவை திறந்தார். உடனே அதிரடியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் மாணிக்கத்தின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத அவர் கூச்சல் போட்டார்.

    இதைக்கேட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரது மனைவி பார்வதியும் பதறி எழுந்தார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரையும் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் இருவரையும் வீட்டிற்குள் துரத்தி துரத்தி கொடூரமாக கழுத்தை அறுத்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் சாரலுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் யாருக்கும் தம்பதியினர் போட்ட மரண ஓலம் கேட்கவில்லை.

    தினமும் அதிகாலையிலேயே எழுந்து பார்வதி வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம். ஆனால் இன்று காலை நீண்ட நேரமாகியும் வாசல் தெளிக்காமல் இருந்தது. அதே நேரம் வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் வெளியே நின்று பார்வதியை அழைத்தனர்.

    ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர்.

    அங்கு கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். வீடு முழுவதும் தரை மற்றும் சுவர்களில் ரத்தம் தெறித்து சிதறிக்கிடந்தது. மேலும் வீட்டின் வாசல் முதல் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உடனடியாக அவர்கள் அதே ஊரில் வசித்து வரும் மாணிக்கத்தின் 4 மகள்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெற்றோரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று கொலையுண்ட தம்பதியினரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்த அவர்கள் மோப்பநாய், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    வீட்டில் எவ்வளவு நகை, பணம் இருந்தது, அது கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது, கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்மநபர்கள் வந்தார்களா அல்லது முன்விரோதம், பகை காரணமாக வந்த மர்மநபர்கள் தம்பதியை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை எடுத்து சென்றார்களா, உறவினர்களே இதில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். நள்ளிரவில் வயதான தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×