search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் பீரோ திறந்து கிடப்பதை படத்தில் காணலாம்
    X
    கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் பீரோ திறந்து கிடப்பதை படத்தில் காணலாம்

    பெரம்பலூரில் தொழில் அதிபர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் 103 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

    பெரம்பலூரில் பிரபல தொழில் அதிபரிடம் கத்தி முனையில் மர்மநபர்கள் ரூ.60 லட்சம் மதிப்பிலான 103 சவரன் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    குன்னம்:

    பெரம்பலூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 65). தொழில் அதிபர். இவர் எளம்பலூர் சாலையில் நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பரமேஸ்வரி (55). இவர்களுக்கு ரேணுகா(32), என்ற மகளும், ஆனந்த் என்ற மகனும் உள்ளனர்.

    கருப்பண்ணனுக்கு சங்குபேட்டை அருகே உள்ள சர்ச் சாலையில் பூர்வீக வீடும், எளம்பலூர் சாலையில் உள்ள நகைக்கடை மாடி மேல் ஒரு வீடும் உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு சங்குபேட்டை வீட்டில் கருப்பண்ணன் மட்டும் தங்கியுள்ளார். மனைவியும், மகளும் எளம்பலூர் சாலையில் நகைக்கடை வீட்டில் படுத்து தூங்கினர். இதற்கிடையே மகன் ஆனந்த் வேலை வி‌ஷயமாக திருச்சி சென்று விட்டார்.

    திருச்சிக்கு அவர் செல்லும் முன்பு, நான் சீக்கிரம் வந்துவிடுவேன் என்று கருப்பண்ணனிடம் கூறி சென்றுள்ளார். இதனால் கருப்பண்ணன் வீட்டின் கதவை பூட்டாமல், இரவு 11 மணியளவில், டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது முகத்தை துணியால் மூடியபடி 3 மர்மநபர்கள் திபுதிபுவென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனை பார்த்த கருப்பண்ணன் சத்தம் போட்டார். உடனே மர்மநபர்கள் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து, கத்தினால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.

    நகை (கோப்புப்படம்)

    இதனால் மிரண்டுபோன கருப்பண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி நின்றுள்ளார். அப்போது அவரிடம் பீரோ சாவியை மிரட்டி வாங்கிய மர்மநபர்கள், பீரோவை திறந்து அதிலிருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 103 சவரன் தங்க நகைகளையும். 9 கிலோ வெள்ளி பொருட்களையும், ரொக்கப் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்தனர்.

    அதன் பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கிய கொள்ளையர்கள், கருப்பண்ணனுக்கு சொந்தமான வீட்டு வாசலில் நின்றிருந்த அவரது சொகுசு காரையும் எடுத்துக்கொண்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து உடனடியாக கருப்பண்ணன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள், மர்மநபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து குறிப்பட்ட தூரம் வரை சென்று நின்றுவிட்டது.

    இச்சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி.சஞ்ஜிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    தொழிலதிபர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 


    இதையும் படியுங்கள்... புதுவகை வைரஸ் பரவல் - தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்தது அமெரிக்கா

    Next Story
    ×