search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆடம்பர வாழ்க்கைக்காக ரெயிலில் வழிப்பறி செய்த மாணவர்கள் 6 பேர் கைது

    திண்டுக்கல் அருகே வழிப்பறி வழக்கில் கைதான மாணவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

    திண்டுக்கல்:

    மதுரை மாவட்டம் புதூர் அருகே உள்ள பரசுராம்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). கடந்த 31-ந்தேதி நள்ளிரவில் இவர், தனது தாய் மற்றும் உறவினர்களுடன் மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயிலில் ஏறினார்.

    அந்த ரெயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது, பாலாஜியின் உறவினர் பெண் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து குதித்து ஓடினார். இதைப்பார்த்த பாலாஜி அவரை பிடிக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பவ இடத்தில் கொள்ளையன் விட்டு சென்ற செல்போன் சிக்கியது. மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் கொள்ளையன் உருவம் பதிவானது.

    அதைவைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரையை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் 5 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ரெயிலில் நகை பறித்தவர் மதுரை மாவட்டம் புதூரை சேர்ந்த ஹரிகரன் (21) என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் கலில்ரகுமான் (19), மாரி (19), விக்னேஷ் (19), சேதுபதி (19) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் கொடைரோடு ரெயில்நிலையம் அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணைநடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான 5 பேரும் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றனர். ஆடம்பரமாக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரெயிலில் வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    மேலும் வழிப்பறி செய்து கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தார்கள். கைதான 6 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×