search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி கீர்த்தனா
    X
    மாணவி கீர்த்தனா

    டாக்டராகும் கனவு தகர்ந்ததால் விரக்தி- நீட் தேர்வால் உயிரை மாய்த்த பெரம்பலூர் மாணவி

    நீட் தேர்வால் பெரம்பலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தீரன்நகரை சேர்ந்தவர் செல்வராஜ், ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மகள் கீர்த்தனா (வயது 19). சேலம் மாவட்டம் வீரகனூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் 2017-18 ம் கல்வியாண்டில் 1,053 மதிப்பெண் பெற்றிருந்தார்.

    மருத்துவம் படிக்க விரும்பிய அவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதில் அவருக்கு 202 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதனால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.

    இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய அவர், அதில் 384 மதிப்பெண்கள் பெற்றார். இதனால் தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

    ஆனால் 2 கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்ற நிலையில், கீர்த்தனா கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு ஏதும் வரவில்லை. இதனால் இந்த ஆண்டும் தனக்கு மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே? என்று எண்ணி மிகவும் மனமுடைந்தார்.

    இதனிடையே பள்ளியிலும், நீட் பயிற்சி மையத்திலும் ஒன்றாக படித்து, பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த கீர்த்தனாவின் தோழி ஒருவர், நீட் தேர்வில் 484 மதிப்பெண் பெற்றதால், அந்த மாணவிக்கு நேற்று முன்தினம் நடந்த 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அதில் பங்கேற்ற அந்த மாணவிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்தது.

    தனது தோழி மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள நிலையில், தனக்கு கிடைக்கவில்லையே என்று கீர்த்தனா விரக்தியடைந்தார். இது பற்றி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இருப்பினும் கீர்த்தனா தொடர்ந்து மனமுடைந்த நிலையிலேயே இருந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வராஜ், அவரது மனைவியை வெளியூருக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய செல்வராஜ், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அலறி துடித்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்து விட்டது. நீட் தேர்வால் டாக்டராக முடியாததால் தமிழகத்தில் முதன் முதலாக அரியலூர் மாவட்டம் குளுமூரை சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். தமிழகத்தையே அந்த சம்பவம் உலுக்கியது.

    அனிதாவுக்கு அடுத்ததாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரவலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி பிரதீபா, திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா, விழுப்புரத்தை சேர்ந்த மாணவி மோனிஷா, திருச்சி நெ.1 டோல்கேட்டை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் நீட் தேர்வால் 7-வது மாணவியாக பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கீர்த்தனாவின் தந்தை செல்வராஜ் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமீபத்தில் அவருக்கு இருதய ஆபரே‌ஷன் செய்யப்பட்டது. அதில் இருந்து அவர் பேச்சுத்திறனை இழந்தார். இந்தநிலையில் தற்கொலை செய்த மகளின் உடலை பார்த்து செல்வராஜ் கதறி அழுதது பொதுமக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

    இதுபற்றி கீர்த்தனாவின் உறவினர்கள் கூறுகையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு அழைக்கப்படாததால் கீர்த்தனா மன வருத்தத்தில் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து விட்டாள். இதுபோன்ற நிலை மற்ற மாணவிகளுக்கு நிகழ்ந்து விடக்கூடாது. அவரை போன்ற முடிவை மற்ற மாணவிகள் எடுக்கக் கூடாது. மேலும் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×