search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் மேயர் உமா மகேசுவரி
    X
    முன்னாள் மேயர் உமா மகேசுவரி

    முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை: வடநாட்டு கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு

    நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலையில் வடநாட்டு கொள்ளை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (வயது62). தி.மு.க.வை சேர்ந்தவரான இவர் தற்போது நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார்.

    உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் (72) நெடுஞ்சாலை துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் இருக்கிறது. அவர்களின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி (37) என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைகார பெண் மாரி ஆகியோர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியே தெரிந்து ஏராளமான தி.மு.க. பிரமுகர்களும், பொதுமக்களும் அவர்களது வீட்டு முன்பு கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கொலைக்கான காரணம் என்ன? யார் கொலை செய்தது என்று கண்டுபிடிக்க கமி‌ஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினார்கள். முதல் தனிப்படையினர் சொத்து பிரச்சினையில் உறவினர்களால் கொலை நடந்ததா என்று விசாரணை நடத்தினர்.

    2-வது தனிப்படையினர் நகை-பணத்துக்காக கொள்ளை கும்பல் கொலை செய்ததா என்றும், 3-வது தனிப்படையினர் பக்கப் பட்டியில் நடைபெற்று வரும் தொடர் கொலை தொடர்பாக சாதிய ரீதியில் கொலை நடந்ததா? என்றும் விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக உமா மகேஸ்வரியின் அண்ணன் மகனான மூளிக்குளம் பிரபு என்பவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் மீது பல கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அவர் சமீப காலமாக பிரச்சினையில் ஈடுபடாமல் அமைதியாக இருந்தார்.

    அத்தை உமா மகேஸ்வரியிடம் அவர் அடிக்கடி பணம் கேட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்தபோது அவரது செல்போன் எந்த பகுதியில் இருந்தது என்றும் விசாரணை நடந்தது. இதில் கொலை-கொள்ளை சம்பவத்துக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரியின் வீடு அருகே ஒரு பரோட்டா கடை உள்ளது. அங்கு தினமும் இரவு வடநாட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சாப்பிட வருவது வழக்கம். இதனால் வடநாட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாமா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இதற்காக அந்த கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைக்கு சந்தேகப்படும் படியாக சில வடநாட்டு வாலிபர்கள் வந்து சென்றது பதிவாகி உள்ளது. இதனால் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். ஆனால் அதில் சில தொழிலாளர்கள் தலைமறைவாக உள்ளனர். இதனால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரி எப்போதும் உபயோகப்படுத்தும் தாலி செயின், மற்றொரு செயின், மோதிரம், கம்மல், வளையல் ஆகியவற்றின் எடை மட்டும் சுமார் 30 பவுன் இருக்கும். மேலும் முருக சங்கரன் கழுத்தில் உள்ள தங்க சங்கிலி, தங்க கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவை சுமார் 20 பவுன் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபோக அவர்களது வீட்டில் சுமார் 50 பவுன் நகைகள் முதல் 100 பவுன் நகைகள் வரை இருந்திருக்கலாம் என்றும், ரொக்கமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதை தெரிந்துகொண்ட வடநாட்டு கும்பல் இந்த நகை-பணத்துக்காக திட்டம் போட்டு கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால் இந்த வழக்கு தற்போது பாளை குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் வெங்கடகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த கொலையில் எப்படியும் குறைந்தபட்சம் 5 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அவர்கள் நெல்லையில் இருந்து வெளியூருக்கு ரெயில் அல்லது பஸ் மூலம் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×